» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதுச்சேரியில் ரூ.5,396 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்: முதல்வா் ரங்கசாமி தாக்கல் செய்தாா்

வெள்ளி 13, பிப்ரவரி 2026 10:40:17 AM (IST)

புதுச்சேரி அரசின் அடுத்த 5 மாத கால செலவினங்களுக்காக ரூ.5,396 கோடி மதிப்பிலான இடைக்கால பட்ஜெட்டை (Vote on Account) முதல்வர் என். ரங்கசாமி வியாழக்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளதால், சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. இதன் காரணமாக, 2026-27-ஆம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தற்போது தாக்கல் செய்ய இயலாத சூழல் நிலவுகிறது.எனவே, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான முதல் 5 மாத கால அரசின் அத்தியாவசியச் செலவினங்களைச் சமாளிக்க இந்த இடைக்கால பட்ஜெட் கொண்டு வரப்பட்டது.

வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும், நிதித்துறைப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் என். ரங்கசாமி ரூ.5,396 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டைச் சமர்ப்பித்தார். இதனைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் ஆர். செல்வம் பட்ஜெட் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தி அவையின் ஒருமனதான ஒப்புதலைப் பெற்றார்.

கூடுதல் செலவினங்கள்: நடப்பு 2025-26 ஆம் நிதியாண்டில் பல்வேறு அரசுத் துறைகளில் ஏற்பட்ட கூடுதல் செலவினங்களுக்காக ரூ.537.38 கோடிக்கு முதல்வர் ரங்கசாமி கோரிய ஒப்புதலுக்கும் பேரவை அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து பல்வேறு தணிக்கைத் துறை அறிக்கைகள் மற்றும் ஏடுகள் அவையில் சமர்ப்பிக்கப்பட்டன.

சட்டப்பேரவை காலவரையன்றி ஒத்திவைப்பு

பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு உரையாற்றிய பேரவைத் தலைவர் ஆர். செல்வம், "மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக எனது அதிகார வரம்பிற்கு உட்பட்டு பணியாற்றியுள்ளேன். முதல்வர் ரங்கசாமியின் ஆலோசனையின்படி மத்திய அமைச்சர்களைச் சந்தித்து மாநிலத் திட்டங்களுக்கான நிதியுதவிகளைப் பெற்றுள்ளோம். 16-வது சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், எதிர்காலத்திலும் மக்கள் நலனுக்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து காலை 11.55 மணிக்கு சட்டப்பேரவை நடவடிக்கைகளை நிறைவு செய்த பேரவைத் தலைவர், அவையைக் காலவரையன்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் அமையவுள்ள புதிய அரசு, 2026-27-ஆம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory