» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சால்வை அணிவிப்பது போல் நடித்து தி.மு.க. நிர்வாகிக்கு கத்திகுத்து - வாலிபர் கைது!

ஞாயிறு 22, பிப்ரவரி 2026 8:40:34 AM (IST)

வேடசந்தூர் அருகே, சால்வை அணிவிப்பது போல் நடித்து தி.மு.க. நிர்வாகியைக் கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் தமுத்துப்பட்டியைச் சேர்ந்தவர் வீரா எஸ்.டி. சாமிநாதன். இவர் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். நேற்று காலை ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார்.

சாமிநாதனின் காரை வழிமறித்த வாலிபர் ஒருவர், அவருக்குச் சால்வை அணிவிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். இதை நம்பி சாமிநாதன் காரில் இருந்து கீழே இறங்கியபோது, அந்த வாலிபர் அவருக்குச் சால்வை அணிவித்துள்ளார். திடீரென அந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த சேவல் சண்டைக்குப் பயன்படுத்தும் கத்தியால் சாமிநாதனின் முதுகுப் பகுதியில் குத்தினார்.

வலியால் அலறிய சாமிநாதனை விட்டுவிட்டு, அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அங்கிருந்த சாமிநாதனின் ஆதரவாளர்கள் விரட்டிச் சென்று அந்த வாலிபரைப் பிடித்தனர். அப்போது அந்த வாலிபர் அவர்களைக் கத்தியால் காட்டி மிரட்டியதுடன், பிடிகொடுக்காமல் தப்பிக்க முயன்றதில் குளத்தூர் காளனம்பட்டியைச் சேர்ந்த நாச்சிமுத்து (54) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இருப்பினும், பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்த மணி (27) என்பது தெரியவந்தது. கொடுக்கல்-வாங்கல் தொடர்பான தகராறில் இவர் சாமிநாதனைக் கத்தியால் குத்தியதாக ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியைக் கைது செய்தனர். காயமடைந்த சாமிநாதன் மற்றும் நாச்சிமுத்து ஆகிய இருவரும் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory