» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆளில்லாத ரயில்வே கேட்டில் கல்லூரிப் பேருந்து மீது ரயில் மோதல் - 23 மாணவர்கள் படுகாயம்!

ஞாயிறு 15, மார்ச் 2026 9:43:47 AM (IST)



கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே ஆளில்லாத ரயில்வே கேட்டைப் பேருந்து கடக்க முயன்றபோது, சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 23 கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் ஓட்டுநர் படுகாயமடைந்தனர்.

காருடையாம்பாளையத்தில் உள்ள வி.எஸ்.பி. பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள், நேற்று மாலை கல்லூரி முடிந்து தங்களது வீடுகளுக்குப் பேருந்தில் புறப்பட்டனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை நோக்கிச் சென்ற பேருந்தை, கடவூரைச் சேர்ந்த பெரியசாமி (64) என்பவர் ஓட்டிச் சென்றார்.

ஜல்லிப்பட்டியை அடுத்த குளத்தூர் பகுதியில் உள்ள ஆளில்லாத ரயில்வே கேட்டைப் பேருந்து கடக்க முயன்றது. அப்போது அரியலூரிலிருந்து கரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த சிமெண்ட் ஆலைக்குச் சொந்தமான சரக்கு ரயில், எதிர்பாராத விதமாகப் பேருந்தின் பின்பக்கத்தில் பலமாக மோதியது. இந்த மோதலின் வேகத்தில் பேருந்து உருக்குலைந்தது. ரயிலின் வேகத்தால் மோதிய பின்னரும் சுமார் 300 மீட்டர் தூரம் வரை ரயில் தள்ளிச் சென்றது.

விபத்தில் பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவர்கள் வலியால் அலறினர். தகவலறிந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டனர். கார்த்திக் சிவா, பவானி, செல்வ ராகவன், கோகுல கண்ணன் உள்ளிட்ட 23 மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் மீட்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த கிரிசுதன் என்ற மாணவர் மேல்சிகிச்சைக்காக கோவையிலும், மேலும் இருவர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்தில் சிக்கிய மாணவர்கள் கூறுகையில், "ரயில் வருவதைக் கண்டு நாங்கள் கத்தினோம், ஆனால் ஓட்டுநர் அதைக் கண்டு கொள்ளாமல் பேருந்தை இயக்கியதால் தான் இந்த விபத்து நேர்ந்தது" என வேதனையுடன் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory