» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மருத்துவ மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: அரசு மருத்துவர் கைது

செவ்வாய் 17, மார்ச் 2026 10:20:28 AM (IST)

ஊட்டியில் தேர்வில் வெற்றி பெற வைப்பதாகக் கூறி மருத்துவ மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

இக்கல்லூரியில் பயிலும் வடமாநிலத்தைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருவர், தேர்வில் வெற்றி பெறுவது குறித்து மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட அதே மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர் ஓம் பிரகாஷ் (44), மாணவிக்குத் தேர்வில் உதவிகள் செய்வதாகக் கூறி நெருங்கிப் பழகியுள்ளார்.

தேர்வு சம்பந்தமாகப் பேச வேண்டும் எனக்கூறி, மாணவியை ஊட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு ஓம் பிரகாஷ் வரவழைத்துள்ளார். அங்கு மேலிடத்தில் பேசி தேர்வில் வெற்றி பெற வைப்பதாக ஆசை வார்த்தை கூறி, மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

மாணவியின் சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த விடுதி ஊழியர்கள் இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். ஊட்டி மத்திய போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஓம் பிரகாஷ் மாணவிக்கு மயக்க மருந்து அல்லது போதைப்பொருள் கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததும், அதனைத் தனது செல்போனில் வீடியோ எடுத்ததும் உறுதியானது.

இதையடுத்து, இந்த வழக்கு ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. மருத்துவர் ஓம் பிரகாஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்து கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட ஓம் பிரகாஷ் சென்னையைச் சேர்ந்தவர். இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் ஆன நிலையில், தற்போது மனைவிகளைப் பிரிந்து தனியாக ஊட்டியில் பணியாற்றி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் இதுபோன்று வேறு மாணவிகளையும் ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory