» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் : குடிநீர் பிரச்சனையால் ஆவேசம்

சனி 11, ஏப்ரல் 2026 10:32:55 AM (IST)



தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சங்கரப்பேரி பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டதைக் கண்டித்து, பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட சங்கரப்பேரி பகுதியில், வழக்கமாக 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன் மோட்டார் பழுதானதால், கடந்த 10 நாட்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் முடங்கியது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், இன்று காலை 9 மணியளவில் சங்கரப்பேரி கிராமப் பொருளாளர் பெரியசாமி தலைமையில் போராட்டத்தில் இறங்கினர். சுமார் 50 பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில், மாப்பிள்ளையூரணி விலக்கு அருகே நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இந்தத் திடீர் மறியல் போராட்டத்தால் தூத்துக்குடியிலிருந்து மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் வழியாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல் ஆய்வாளர் தனசேகரன், உதவி ஆய்வாளர்கள் முத்துமாலை, சண்முக பாலன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகத் தீர்வு ஏற்படவில்லை.

தகவலறிந்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் "அடுத்த 10 நாட்களுக்குள் பழுதான மோட்டார் முழுமையாகச் சரிசெய்யப்பட்டு குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படும். அதுவரை லாரிகள் மூலம் தங்குதடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

மேயரின் இந்த உறுதியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory