» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாரதிராஜா உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் : அமைச்சர்கள், திரைத்துறையினர் இறுதி அஞ்சலி
வெள்ளி 12, ஜூன் 2026 8:01:59 AM (IST)

இயக்குனர் பாரதிராஜா உடல் தேனி பண்ணைத் தோட்டத்தில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழ் சினிமாவின் யதார்த்தமான கிராமியப் பதிவுகளுக்கு வித்திட்ட 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா (84) உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன் தினம் காலமானார். அவரது உடல் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காட்ரோட்டில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 1977-ஆம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராகத் தடம் பதித்து, ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே வியந்து பார்க்க வைத்த பெருமை பாரதிராஜாவையே சேரும். சென்னையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஒட்டுமொத்தத் திரையுலகப் பிரபலங்களும் நேரில் வருகை தந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி அல்லிநகரம் ஆகும். அவருக்குச் சொந்தமான பண்ணைத் தோட்டம் தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் செல்லும் சாலை சந்திப்பில் உள்ள காட்ரோடு என்ற இடத்தில் அமைந்துள்ளது. அந்தத் தோட்டத்திலேயே இறுதிச்சடங்குகளைச் செய்து உடலை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி, நேற்று அதிகாலை அவரது உடல் சென்னை நீரிலிருந்து காட்ரோடு பண்ணை இல்லத்திற்குப் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காகக் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி:
அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் திரைத்துறையினர், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து மலரஞ்சலி செலுத்தினர். தேனி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தங்களது பிரியமான இயக்குனருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் பண்ணை வீட்டின் முன்பிருந்து அடக்கம் செய்யும் இடத்திற்குப் பாரதிராஜாவின் உடலை உறவினர்களும், திரையுலகப் பிரமுகர்களும் தோள்களில் சுமந்து வந்தனர். அங்கு அவரது மகள் ஜனனி முறைப்படி இறுதிச்சடங்குகளைச் செய்தார்.
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை:
பாரதிராஜாவின் கலைச் சேவையைப் பாராட்டி அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதன்படி, தமிழக அரசு சார்பில் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அவர்களைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் ஆர். வைத்திநாதன், திண்டுக்கல் மண்டலப் பாதுகாப்பு உயர் அதிகாரி டி.ஐ.ஜி. சசிமோகன் மற்றும் மாவட்டப் பொறுப்பு அதிகாரி எஸ்பி சினேகாபிரியா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ஆயுதப்படை போலீசார் சார்பில் 72 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, ஒரு நிமிடம் மௌன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது. அதன்பிறகு அவரது உடல் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, கவிஞர் வைரமுத்து, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, பார்த்திபன், பாக்கியராஜ், வெற்றிமாறன், அமீர், பேரரசு, பொன்ராம், ரத்தினக்குமார், ராம், களஞ்சியம், சித்ரா லட்சுமணன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் நடிகர்கள் நிழல்கள் ரவி, சமுத்திரக்கனி, வடிவேலு, இளவரசு, கருணாஸ், சிங்கம் புலி, தாமு, ஜோ மல்லூரி, எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி, பாடலாசிரியர் சினேகன், நடிகைகள் ராதிகா சரத்குமார், நிரோஷா, சுஹாசினி, தீபா, சின்னத்திரை கலைஞர் ஸ்டாலின், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் உட்படப் பல நூற்றுக்கணக்கான திரையுலக மற்றும் சின்னத்திரைக் கலைஞர்கள், நுகர்வோர் பொது அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:10:10 PM (IST)

ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்: 7 நாளில் விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவு
வெள்ளி 12, ஜூன் 2026 5:26:53 PM (IST)

திமுக அரசின் சாதனைகள் மீது சோஃபா மாடல் அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது: உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:19:26 PM (IST)

திமுக தோல்விக்கு அமைச்சர்களும், அதிகாரிகளுமே காரணம்? மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:00:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழா சிறப்பு மலர் : மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!
வெள்ளி 12, ஜூன் 2026 3:39:35 PM (IST)

கள் இறக்குமதிக்கு அனுமதி: உயர்நீதிமன்ற பரிந்துரையை அமல்படுத்த வழக்கறிஞர் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
வெள்ளி 12, ஜூன் 2026 3:28:23 PM (IST)


