» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா?: மு.க.ஸ்டாலின் பதில்!

வெள்ளி 26, ஜூன் 2026 5:16:32 PM (IST)

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை, விரைவில் நடைபெறவுள்ள திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வைக்க திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு உட்பட 6 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதியானது தற்போதைய முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். அவர் பெரம்பூர் தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்ததால், தனது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். இதனால் காலியான இத்தொகுதியில், மு.க.ஸ்டாலினைப் போட்டியிடச் செய்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது திமுகவினரின் திட்டமாக உள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து காரில் வீடு திரும்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், இப்போட்டி குறித்து மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், "இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்று சுருக்கமாகத் தெரிவித்தார். 

இந்தத் தகவலால், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் களம் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory