» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கனரக லாரி மோதி மின்கம்பம் முறிந்து விழுந்தது : மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு!

புதன் 1, ஜூலை 2026 7:54:45 AM (IST)



சாத்தான்குளம் அருகே கனரக லாரி மோதி மின்கம்பம் முறிந்து விழுந்த விபத்தில், உயர் அழுத்த மின்சாரம் உடனடியாகத் துண்டிக்கப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்துகளைத் தடுக்கக் கனரக வாகனங்கள் ஊருக்குள் வரத் தடை விதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் இஸ்ரோ (ISRO) திட்டப் பணிகளுக்காகச் சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம், முதலூர், பொத்தகாலன்விளை, மணிநகர், படுக்கப்பத்து வழியாக நாள்தோறும் அதிக பாரம் ஏற்றிய கனரக லாரிகளில் கற்கள் மற்றும் மணல் கொண்டு செல்லப்படுகின்றன. 

இந்நிலையில், நேற்று பிற்பகல் குலசேகரப்பட்டினத்தில் பாரத்தை இறக்கிவிட்டுச் சுப்பராயபுரம் வழியாகத் திரும்பிய கனரக லாரி ஒன்று, ஊரின் மையப்பகுதியில் சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் முறிந்து லாரியின் மீது சரிந்ததோடு, உயர் அழுத்த மின் கம்பிகளும் அறுந்து விழுந்தன. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், அந்த நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததாலும் பெரும் விபத்து ஏதும் ஏற்படாமல் மக்கள் தப்பினர்.

தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, இப்பகுதியில் லாரிகளால் ஏற்கனவே இரண்டுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறி கிராம மக்கள் அச்சம் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி மற்றும் சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜா ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, சுப்பராயபுரம் பகுதியின் குறுகலான சாலைகளில் அதிவேகமாகச் செல்லும் கனரக லாரிகளால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும் கூறி, லாரிகள் ஊருக்குள் நுழைவதைத் தடை செய்யக் கோரி மக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைப்பதாக உறுதி அளித்தார்.


மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு
 
சாத்தான்குளம் முதலூர் சாலையில் மரம் திடீரென முறிந்து விழுந்ததில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..

சாத்தான்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீரென சூறை காற்று வீசியது. இதில் சாத்தான்குளத்தில் இருந்து முதலூர் செல்லும் சாலை ஓரத்தில் இருந்த வாடாட்சி மரம் திடீரென பெரும் சத்தத்துடன் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக நின்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். மரம் முறிந்த நேரத்தில் அந்த பகுதியில் போக்குவரத்து நிகழாமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

சாலையோரம் சென்ற மின் கம்பிகளும் சேதமாகி மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.. போக்குவரத்து தடைபட்டதால் அந்த வழியாக அந்த வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன உடன் விரைந்து வந்து மின்வாரிய ஊழியர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். சேதமான மின்கம்பத்தையும் சீரமைத்தனர். அதன்பின் போக்குவரத்து சீரானது.. சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory