» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் விதிகளை மீறிய லாரிகள் பறிமுதல் : போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை!

சனி 4, ஜூலை 2026 10:41:00 AM (IST)

Lorrytuty4i.jpg

தூத்துக்குடி மாநகரப் பகுதிக்குள் தடை உத்தரவை மீறி, பிரதான சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாகச் சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்த இரண்டு லாரிகளைப் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர்.

தூத்துக்குடி மாநகரப் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் உள்ளே நுழைவதற்குத் தடை உத்தரவு நீண்ட நாட்களாக அமலில் உள்ளது. 

ஆனால், இந்த தடை உத்தரவை முற்றிலும் மீறி வெளியூர்களில் இருந்து லாரிகளில் வரும் சரக்குகளைத் தூத்துக்குடி பிரதான சாலையில் உள்ள வணிகக் கடைகளில் இறக்குவதற்காக, லாரிகள் சாலையோரங்களில் வரிசையாக நிறுத்தப்பட்டு வருகின்றன.

இதனால், காலையிலும் மாலையிலும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் குறித்த நேரத்திற்குச் செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாகப் போக்குவரத்து போலீசாருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இப்புகார்களைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகரப் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனை முருகன், உதவி ஆய்வாளர் சண்முகபாலன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் இன்று தூத்துக்குடி பிரதான சாலையில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தடை உத்தரவு நேரத்தை மீறிச் சாலையில் நின்று சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்த இரண்டு லாரிகளைப் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்து, தென்பாகம் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

பின்னர், விதிமீறலில் ஈடுபட்ட அந்த இரண்டு லாரிகளுக்கும் தலா ரூபாய் 4,000 வீதம் மொத்தம் 8,000 ரூபாய் அதிரடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இதுபோன்று போக்குவரத்து விதிமீறல்களைத் தொடர்ந்து லாரிகள் இயக்கினால், அவை நிரந்தரமாகப் பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என்று போக்குவரத்து ஆய்வாளர் சுனைமுருகன் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory