» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காங்கிரஸ் அமைச்சரை விடுவிக்கத் தவெக அரசு தயாரா? எடப்பாடி பழனிசாமி கேள்வி

வியாழன் 9, ஜூலை 2026 4:53:50 PM (IST)

EdappadiVijay.jpg

காவிரியில் தமிழகத்திற்குரிய நீரை விடுவிக்கவில்லையெனில், கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்கத் தவெக அரசின் முதல்வர் தயாராக உள்ளாரா? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரதத்தில் சர்வாதிகார மனப்பான்மையுடனும் சகோதரத்துவத்தைச் சீர்குலைக்கும் எண்ணத்துடனும் கர்நாடகத்தை நிர்வகிக்கும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் திகழ்வது நாட்டின் சாபக்கேடு எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழக டெல்டா மாவட்ட விவசாயமும், 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீரும் காவிரியையே நம்பியுள்ள சூழலில், நதிநீர் தகராறு தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கர்நாடக ஆட்சியாளர்கள் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதாகச் சாடியுள்ளார். மேலும், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் டி.கே.சிவகுமார், அங்கு வாழும் தமிழர்களின் உழைப்பை மறந்துவிடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடவில்லை என்றும் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுவது வடிகட்டிய பொய் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீதிமன்ற வழிகாட்டுதலைக் கர்நாடக அரசு முறையாகச் செயல்படுத்துகிறதா என்பதைக் கண்காணிப்பதுதான் மேலாண்மை ஆணையத்தின் பணி என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தோடு கர்நாடக காங்கிரஸ் விளையாடுவதைத் தவெக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கர்நாடகம் வழங்க வேண்டிய பங்கு நீரைப் பெறுவதற்குத் தவெக அரசின் முதலமைச்சர் உடனடியாக வலியுறுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார். காவிரியில் தமிழகத்திற்குரிய நீரை விடுவிக்கவில்லையெனில், ‘தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார்’ என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்கத் தவெக அரசின் முதல்வர் தயாராக உள்ளாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்ற சிலப்பதிகார வரிகளை நினைவு கூர்ந்து, ஆட்சிப் பொறுப்பில் இருந்து தவறி மக்களுக்கு அநீதி இழைப்பவர்களை அறநெறியே தண்டிக்கும் எனத் தமிழக, கர்நாடக இரு ஆட்சியாளர்களையும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory