» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எழுத்தாளர் பூமணி மறைவு: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு - முதல்வர் விஜய் அறிவிப்பு!
திங்கள் 13, ஜூலை 2026 10:29:32 AM (IST)

மறைந்த மூத்த எழுத்தாளர் பூமணி உடலுக்குத் தமிழக அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ அரசு மரியாதை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
சாகித்ய அகாதெமி விருது பெற்றவரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளியுமான பூமணி (இயற்பெயர்: பூலித்துரை மாணிக்கவாசகம், 79 ஆண்டுகள்) உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் காலமானார். இவரது உடல் சென்னையில் இருந்து சொந்த ஊரான கோவில்பட்டிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இறுதிச்சடங்குகள் கோவில்பட்டியில் நடைபெறும் என அவரது உறவினரும் எழுத்தாளருமான சோ.தர்மன் தெரிவித்துள்ளார்.
பூமணியின் மறைவுக்குத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி பூமணி எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது 'அஞ்ஞாடி' நாவலுக்காகச் சாகித்ய அகாதெமி விருது பெற்றது அவரது இலக்கிய ஆளுமைக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரமாகும். அவரது 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'அசுரன்' திரைப்படம் அவரது எழுத்தின் வீச்சை உலகறியச் செய்தது. பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், எழுத்தாளர்களுக்கும், இலக்கிய உலகினருக்கும் ஆழ்ந்த ஆறுதல்களைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், பூமணியின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் எனப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
இலக்கியம் மற்றும் திரைத்துறைப் பங்களிப்பு:
1966 ஆம் ஆண்டு முதல் கவிதை, சிறுகதைகள் எழுதி வந்த பூமணி, 1979 முதல் நாவல்களை எழுதத் தொடங்கினார். இவரது முதல் நாவல் 'பிறகு' என்ற தலைப்பில் வெளியானது. தொடர்ந்து வெக்கை, நைவேத்யம், வரப்புகள், வாய்க்கால் ஆகிய முக்கிய நாவல்களை எழுதினார். 19 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் சிவகாசி சாதிக் கலவரம் உள்ளிட்ட வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்த இவரது 1,100 பக்கங்கள் கொண்ட 'அஞ்ஞாடி' நாவலுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
திரைத்துறையில் 'கருவேலம் பூக்கள்' என்ற திரைப்படத்தை பூமணி இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து 2019 இல் வெளியான 'அசுரன்' திரைப்படத்திற்கு இவரது 'வெக்கை' நாவலே மூலக்கதையாக அமைந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வரதட்சணை நகைகளைத் திரும்பக் கேட்ட தாய் : காவல் நிலையத்தில் புதுப்பெண் அதிரடிப் புகார்!
திங்கள் 13, ஜூலை 2026 4:58:41 PM (IST)

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்!
திங்கள் 13, ஜூலை 2026 4:02:29 PM (IST)

பனையூரை தேசிய புவி-பாரம்பரிய பூங்காவாக அறிவிக்க வேண்டும் - மத்திய அரசுக்குக் கோரிக்கை!
திங்கள் 13, ஜூலை 2026 3:49:24 PM (IST)

மகளிர் விளையாட்டு விடுதியில் ஆட்சியர் திடீர் ஆய்வு: வீராங்கனைகளுடன் கலந்துரையாடல்!
திங்கள் 13, ஜூலை 2026 12:54:36 PM (IST)

திருநெல்வேலி – நாகர்கோவில் – திருவனந்தபுரம் வழித்தடத்தில் நேரடி இரயில் இயக்க கோரிக்கை!
திங்கள் 13, ஜூலை 2026 12:12:25 PM (IST)

2031-ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம்: பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை உறுதி!
திங்கள் 13, ஜூலை 2026 11:53:56 AM (IST)


