» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசியல் சூட்டைத் தணித்த கனமழை: தமிழகத்தை நோக்கிப் பொங்கி வரும் காவிரி - விவசாயிகள் மகிழ்ச்சி!

திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:39:51 AM (IST)

cauveryiver.jpg

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தமிழகத்தை நோக்கித் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் நீர்மட்டம் 79 அடிக்கும் குறைவாக இருந்ததால், இந்த ஆண்டு வழக்கமான தேதியான ஜூன் 12-ஆம் தேதி பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைத் திறந்துவிடுமாறு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. 15 நாட்களுக்குத் வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கக் குழு அறிவுறுத்தியபோதிலும் கர்நாடகம் அதனை ஏற்க மறுத்தது.

காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகம் முறையீடு செய்த நிலையில், ஆணையமும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்குமாறு கடந்த ஜூலை 24-ல் உத்தரவிட்டது.

மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்குக் கர்நாடகத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. இதனிடையே, இரு மாநிலப் பேச்சுவார்த்தைக்காகத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் பெங்களூருவில் சந்தித்துப் பேசத் திட்டமிடப்பட்டது.

இருப்பினும், இதற்குத் தமிழக எதிர்க்கட்சிகளும் கர்நாடக அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்தச் சந்திப்பு தள்ளிவைக்கப்பட்டது. இரு மாநிலங்களிடையே காவிரி விவகாரத்தில் அரசியல் பிணக்கு நீடித்து வந்த சூழலில், கடந்த ஜூலை 31-ஆம் தேதி காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிவேகமாக அதிகரித்தது.

பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி தமிழக எல்லைக்கு வினாடிக்கு 28,000 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு:

தற்போது கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜசாகரில் 91.8 அடியும், கபினியில் 56.28 அடியும், ஹேரங்கியில் 127.55 அடியும், ஹேமாவதியில் 100.98 அடியும் தண்ணீர் உள்ளது.

அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கக் கூடும். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.82 அடியாக உள்ள நிலையில், காவிரி நீர் அணையை வந்தடையும் போது நீர்மட்டம் வேகமாக உயரும். இது அடுத்து வரவிருக்கும் சம்பா சாகுபடிக்கு உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory