» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவை - தூத்துக்குடி இடையே விமான சேவை: மத்திய, மாநில அரசுகளுக்கு தொழில்துறையினர் கோரிக்கை!

திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:51:13 AM (IST)

flightut.jpg

தொழில் நகரங்களான கோவை -  தூத்துக்குடி இடையே நேரடி விமான சேவையைத் தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வரும் நிலையில், பலர் பல்வேறு தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். இங்கிருந்தும், பின்னலாடை நகரமான திருப்பூரில் இருந்தும் ஜவுளி மற்றும் எந்திரங்களின் உதிரிபாகங்கள் கொச்சி மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் வழியாகவே பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கோவையில் இருந்து கொச்சிக்கு விமான சேவை உள்ள நிலையில், தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவை இல்லை. இதனால் தொழில்துறையினர் ரயில்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் கார்களிலேயே நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.

இது குறித்துக் கோவை தொழில் வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் நந்தகுமார் மற்றும் தொழில்துறையினர் தெரிவித்ததாவது: "மத்திய அரசின் 'உதான்' (UDAN) திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் வான்வழியாக இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்திற்கு விமான சேவையைத் தொடங்க வேண்டும்.

கோவை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு இடங்களிலுமே தற்போது விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடப்பதால், ஆரம்பக் கட்டமாக 72 முதல் 78 இருக்கைகள் கொண்ட ஏ.டி.ஆர்.-72 (ATR-72) என்ற சிறிய ரக விமானங்களை இயக்கலாம்.  இதன் மூலம் தொழில்துறையினர் மட்டுமின்றி, கோவையில் இருந்து திருச்செந்தூர் கோயிலுக்குச் செல்லும் ஆன்மிகப் பயணிகளும் பெருமளவில் பயனடைவார்கள்."

இது குறித்துக் கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், கோவையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்குத் (AAI) தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் சேவைகளைத் தொடங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory