» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒரே நாளில் 23 விக்கெட்டுகள்: கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை!

வியாழன் 4, ஜனவரி 2024 12:02:55 PM (IST)



இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், மொத்தம் 23 விக்கெட்டுகள் விழுந்தன, இது ஒரு டெஸ்டின் முதல் நாளில் விழுந்த இரண்டாவது அதிக விக்கெட்டுகள் ஆகும்.

கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அறிமுக வீரராக களமிறங்கினார். லுங்கி நிகிடி, கேசவ் மகாராஜ் ஆகியோரும் களமிறக்கப்பட்டனர். இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்குர் ஆகியோர் நீக்கப்பட்டு ரவீந்திர ஜடேஜா, முகேஷ் குமார் சேர்க்கப்பட்டனர். முகேஷ் குமாருக்கு இது அறிமுக டெஸ்ட் போட்டியாக அமைந்தது.

பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முகமது சிராஜின் சீரான வேகம், துல்லியம், ஸ்விங் ஆகியவற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் 23.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது சிராஜ் பந்து வீச்சில் டீன் எல்கர் (4), எய்டன் மார்க்ரம் (2), டோனி டி ஜோர்ஸி (2), டேவிட் பெடிங்ஹாம் (12), கைல் வெர்ரைன் (15), மார்கோ யான்சன் (0) ஆகியோர் நடையை கட்டினர். ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 3, நந்த்ரே பர்கர் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். காகிசோ ரபாடா 5, கேசவ் மகாராஜா 3 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் வெளியேறினர்.

முகமது சிராஜ் 9 ஓவர்களை வீசி 3 மெய்டன்களுடன் 15 ரன்களை வழங்கி 6 விக்கெட்களை வீழ்த்தினார். ஜஸ்பிரீத் பும்ரா 8 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 25 ரன்களை வழங்கி 2 விக்கெட்களையும், முகேஷ் குமார் 2.2 ஓவர்களை வீசி 2 மெய்டன்களுடன் ரன் ஏதும் கொடுக்காமல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணி 1991-ம் ஆண்டு மறுபிரவேசத்துக்குப் பின்னர் குறைந்த ரன்களில் (55) ஆட்டமிழப்பது இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்னர் கடந்த 2018-ம் ஆண்டு காலே டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 73 ரன்களில்ஆட்டமிழந்து இருந்தது தென் ஆப்பிரிக்க அணி.

இதையடுத்து பேட் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி தொடக்கம் கொடுத்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெஸ்ய்வால் 7 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரபாடா பந்தில் போல்டானார். இதன் பின்னர் களமிறங்கிய ஷுப்மன் கில் நிதானமாக பேட் செய்தார். மார்கோ யான்சன் வீசிய 10-வது ஓவரின் 4-வது பந்தை ரோஹித் சர்மா பவுண்டரிக்கு விரட்ட இந்திய அணி 55 ரன்களை கடந்து முன்னிலை பெறத் தொடங்கியது.

ரோஹித் சர்மா 50 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் நந்த்ரே பர்கர் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஷுப்மன் கில் 36 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஸ்ரேயஸ் ஐயர் 0, கே.எல்.ராகுல் 8, ரவீந்திர ஜடேஜா 0, ஜஸ்பிரீத் பும்ரா 0 ரன்களில் நடையை கட்டினர். நிதானமாக விளையாடிய விராட் கோலி 59 பந்துகளில், 6 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் வெளியேறினார். தொடர்ந்து சிராஜ் 0, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்ட முடிவில் 34.5 ஓவர்களில் இந்திய அணி 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா, நந்த்ரே பர்கர், லுங்கி நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 17 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 62 ரன்கள் சேர்த்தது. டீன் எல்கர் 12, டோனி டி ஜோர்ஸி 1, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 7 ரன்களில் வெளியேறினர். எய்டன் மார்க்ரம் 36, டேவிட் பெடிங்ஹாம் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே கேப்டவுனில் நடைபெற்றுவரும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 23 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டமையானது 122 வருடங்களுக்கு பின்னர் நிகழ்த்தப்பட்ட சாதனையாக கருதப்படுகிறது. 1902ஆம் ஆண்டுக்கு பினர் முதல் நாளில் 23 விக்கெட்டுகளை இழந்திருக்கும் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா போட்டி, ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் நாளிலேயே அதிக விக்கெட்டுகளை இழந்த இரண்டாவது போட்டியாக மாறியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory