» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெல்லி அணி 'திரில்' வெற்றி: 4 ரன் வித்தியாசத்தில் குஜராத் தோல்வி!

வியாழன் 25, ஏப்ரல் 2024 11:58:55 AM (IST)



குஜராத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கடைசி பந்தில் அசத்திய டெல்லி அணி 4 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் நடக்கிறது. டெல்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் டெல்லி, குஜராத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற குஜராத் அணி பீல்டிங் தேர்வு செய்தது. டெல்லி அணிக்கு பிரேசர்-மெக்குர்க் (23) ஆறுதல் தந்தார். பிரித்வி ஷா (11), ஷாய் ஹோப் (5) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய அக்சர் படேல் (66) அரைசதம் கடந்தார். 

மோகித் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கேப்டன் ரிஷாப் பன்ட், 34 பந்தில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய பன்ட், மோகித் வீசிய கடைசி ஓவரில் 4 சிக்சர் உட்பட 31 ரன் விளாசினார். டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 224 ரன் எடுத்தது. பன்ட் (88 ரன், 8 சிக்சர், 5 பவுண்டரி), டிரிஸ்டன் (26) அவுட்டாகாமல் இருந்தனர். குஜராத் சார்பில் சந்தீப் வாரியர் 3 விக்கெட் சாய்த்தார்.

சவாலான இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில் (6) ஏமாற்றினார். சகா (39) ஓரளவு கைகொடுத்தார். அஸ்மதுல்லா (1) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய சாய் சுதர்சன் (65) அரைசதம் கடந்தார். ஷாருக்கான் (8), டிவாட்டியா (4) சோபிக்கவில்லை.

நார்ட்ஜே வீசிய 17வது ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய டேவிட் மில்லர், 21 பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 55 ரன்னில் அவுட்டானார். சாய் கிஷோர் (13) நிலைக்கவில்லை. கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்டன. முகேஷ் குமார் பந்துவீசினார். முதலிரண்டு பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரஷித் கான், அடுத்த இரு பந்துகளை வீணடித்தார். 

ஐந்தாவது பந்தை சிக்சருக்கு அனுப்பிய இவர், கடைசி பந்தில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை.குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 220 ரன் எடுத்து தோல்வியடைந்தது. ரஷித் கான் (21) அவுட்டாகாமல் இருந்தார். டெல்லி சார்பில் ராசிக் சலாம் 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட் வென்றார்.

டெல்லிக்கு எதிராக களமிறங்கிய குஜராத் கேப்டன் சுப்மன் கில், தனது 100வது ஐ.பி.எல்., போட்டியில் விளையாடினார். இம்மைல்கல்லை எட்டிய 2வது இளம் (24 ஆண்டு, 229 நாள்) வீரரானார். முதலிடத்தில் ரஷித் கான் (24 ஆண்டு, 221 நாள்) உள்ளார்.

குஜராத் வேகப்பந்துவீச்சாளர் மோகித் சர்மா (73 ரன், 4 ஓவர்), ஐ.பி.எல்., அரங்கில் மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். இதற்கு முன் ஐதராபாத்தின் பசில் தம்பி (70 ரன், 4 ஓவர், எதிர்: பெங்களூரு, 2018) இருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory