» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங் அசத்தல்: 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
திங்கள் 3, நவம்பர் 2025 8:47:06 AM (IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது. வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங் அசத்தினர்.
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி ஹோபர்ட்டில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மூன்று மாற்றமாக குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஜிதேஷ் ஷர்மா, அர்ஷ்தீப்சிங் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஹேசில்வுட்டுக்கு பதிலாக சீன் அப்போட் இடம் பிடித்தார்.
‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. டிராவிஸ் ஹெட் (6 ரன்), அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் (1 ரன்) ஆகியோரை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் காலி செய்தார். மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் மிட்செல் மார்சும் (11 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.
4-வது வரிசையில் களம் புகுந்த டிம் டேவிட் அதிரடி காட்டி ஸ்கோரை தடாலடியாக உயர்த்தினார். வருண் சக்ரவர்த்தி, அக்ஷர் பட்டேலின் சுழலில் சிக்சர்கள் பறந்தன. 23 பந்துகளில் அரைசதத்தை கடந்த டிம் டேவிட் 74 ரன்களில் (38 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) ஷிவம் துபே பந்தில் கேட்ச் ஆனார். அவர் விட்டுச்சென்ற பணியை ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் எடுத்துக் கொண்டார். அவரும் வேகமாக ரன் திரட்டுவதில் கவனம் செலுத்தினார்.
ஒரு கட்டத்தில் அந்த அணி 200 ரன்களை தாண்டுவது போல் சென்றது. ஆனால் கடைசி இரு ஓவர்களில் பும்ராவும் (6 ரன் கொடுத்தார்), அர்ஷ்தீப் சிங்கும் (10 ரன் கொடுத்தார்) கட்டுப்படுத்தியதால் அவர்களால் ‘டபுள் செஞ்சுரி’ ஸ்கோரை அடைய முடியவில்லை. ஸ்டோனிஸ் 64 ரன்களில் (39 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அடுத்து 187 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் களம் இறங்கிய அத்தனை பேரும் இரட்டை இலக்க பங்களிப்பை வழங்கி அணி வெற்றியை நோக்கி பயணிக்க உதவினர். முதலில் அபிஷேக் ஷர்மா 16 பந்தில் 25 ரன்கள் (2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அச்சாரம் போட்டார். சுப்மன் கில் 15 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 24 ரன்களும் எடுத்தனர்.
அணி கொஞ்சம் நெருக்கடியான சூழலில் இருந்த போது 5-வது விக்கெட்டுக்கு நுழைந்த தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்து வீச்சாளர்கள் எலிஸ், சீன் அப்போட் ஓவர்களில் அட்டகாசமான சிக்சர்களை நொறுக்கி எதிரணியின் நம்பிக்கையை தகர்த்தார். கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
இந்திய அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 49 ரன்களுடனும் (23 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), ஜிதேஷ் ஷர்மா 22 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். அர்ஷ்தீப்சிங் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு விழுந்த முதல் அடி இதுவாகும். இதற்கு முன்பு இங்கு ஆடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்தது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமனுக்கு ெகாண்டு வந்தது. 4-வது 20 ஓவர் போட்டி வருகிற 6-ந்தேதி கோல்டுகோஸ்டில் நடக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம் வீண் : இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:28:52 PM (IST)

மகளிர் உலகக் கோப்பை : ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணிக்கு சச்சின், கோலி வாழ்த்து!
வெள்ளி 31, அக்டோபர் 2025 12:13:32 PM (IST)

நாக்-அவுட் சுற்றில் இமாலய இலக்கை விரட்டி: இந்திய மகளிர் அணி உலக சாதனை!
வெள்ளி 31, அக்டோபர் 2025 11:27:56 AM (IST)

கிளட்ச் செஸ் போட்டி: நகமுராவை பழிதீர்த்தார் குகேஷ்
புதன் 29, அக்டோபர் 2025 8:27:40 AM (IST)

ஷ்ரேயாஸ் உடல்நிலை சீராக உள்ளது: சூர்ய குமார் தகவல்!
செவ்வாய் 28, அக்டோபர் 2025 4:12:38 PM (IST)

இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
திங்கள் 27, அக்டோபர் 2025 4:16:16 PM (IST)




