» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆஸ்திரேலியாவில் மீண்டும் டி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:11:42 AM (IST)

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதிய கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் ஒரு மாற்றமாக முந்தைய ஆட்டங்களில் சோபிக்காத திலக் வர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிங்கு சிங் சேர்க்கப்பட்டார்.
‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யும்படி பணித்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் வேகமாக மட்டையை சுழற்றினர். பென் துவார்ஷூயிஸ் வீசிய ஒரு ஓவரில் சுப்மன் கில் 4 பவுண்டரிகள் விளாசி அமர்க்களப்படுத்தினார்.
5 மற்றும் 11 ரன்னில் இருக்கையில் ‘கேட்ச்’ கண்டத்தில் இருந்து தப்பிய அபிஷேக் சர்மா நாதன் எலிஸ் பந்து வீச்சில் சிக்சர் விளாசி அசத்தினார். 4.2 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன் எடுத்திருந்த போது இடி மற்றும் மின்னல் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது அபிஷேக் ஷர்மா 23 ரன்களுடனும் (13 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்), சுப்மன் கில் 29 ரன்களுடனும் (16 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆட்டம் நிறுத்தப்பட்டதும் வீரர்கள் அவசரமாக தங்கள் அறைக்கு திரும்பினர். ரசிகர்கள் யாரும் திறந்தவெளியில் நிற்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இடி, மின்னலை அடுத்து சற்று நேரத்தில் மழையும் பலமாக கொட்டியது. மழை தொடர்ந்து பெய்ததால் 2¼ மணி நேர பாதிப்புக்கு பிறகு ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா (மொத்தம் 163 ரன்கள்) தொடர்நாயகன் விருதை கைப்பற்றினார்.
5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி தொடரை வெல்வது இது 6-வது முறையாகும். கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் ரத்தானது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், ஹோபர்ட்டில் நடந்த 3-வது ஆட்டம் மற்றும் கோல்டு கோஸ்டில் நடந்த 4-வது ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று இருந்தது.
2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 20 ஓவர் தொடரை இழந்து கிடையாது. முன்னதாக நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் தோற்று இருந்தது. அதற்கு சரியான பதிலடி கொடுத்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வான்கடேவில் சாதனை சேஸிங்: ரோஹித் - ரிக்கிள்டன் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
செவ்வாய் 5, மே 2026 12:07:12 PM (IST)

மும்பையை வீழ்த்தி சென்னை அபார வெற்றி: ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை!
ஞாயிறு 3, மே 2026 1:42:39 PM (IST)

மகளிர் டி20 உலகக்கோப்பை : இந்திய அணி அறிவிப்பு
சனி 2, மே 2026 5:47:25 PM (IST)

இந்திய இன்டோர் ஓபன் தடகளப் போட்டி: தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் பங்கேற்பு
சனி 2, மே 2026 11:52:50 AM (IST)

ஐபிஎல் விதிமுறை மீறல்: ராஜஸ்தான் இளம் வீரரிடம் ஆக்ரோஷம் காட்டிய ஜேமிசனுக்கு அபராதம்!
சனி 2, மே 2026 11:49:03 AM (IST)

இ-சிகரெட் பயன்படுத்திய ரியான் பராக்கிற்கு அபராதம்: ஆர்.ஆர். அணி நிர்வாகத்திற்கும் பிசிசி ஐஎச்சரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:14:41 PM (IST)


