» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: அபார வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா..!

சனி 22, நவம்பர் 2025 4:31:08 PM (IST)



ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் முன்னிலை பெற்றது.

40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஸாக் கிராலி மீண்டும் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் 37 ரன்களும், ஆலி போப் 33 ரன்களும் எடுத்தனர். பென் டக்கெட் 28 ரன்களும், பிரைடான் கார்ஸ் 20 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலாண்ட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் பிரண்டன் டாக்கெட் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 204 ரன்கள் முன்னிலை பெற்றதால், முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற ஆஸ்திரேலிய அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 28.2 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் சதம் விளாசி அசத்தினார். அவர் 83 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 16 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மார்னஸ் லபுஷேன் 49 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. டிராவிஸ் 69 பந்தில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் 104 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது. இரு நாட்களுக்குள் ஆஷஸ் போட்டி முடிவுக்கு வருவது வரலாற்றில் இது 6-வது முறை மட்டுமே. 1888-ல் 3 முறை, 1890, 1921 ஆண்டுகளில் தலா ஒரு முறை இவ்வாறு நடந்துள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory