» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மிட்செல் சதம்: 2-வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி

வியாழன் 15, ஜனவரி 2026 8:57:19 AM (IST)



இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டேரில் மிட்செல் சதத்தால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று பகல்- இரவு மோதலாக நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் பிரேஸ்வெல் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்த ரோகித் சர்மாவும், கேப்டன் சுப்மன் கில்லும் நிதானமாக ஆடினர்.

அணியின் ஸ்கோர் 70-ஆக உயர்ந்த போது (12.2 ஓவர்) ரோகித் சர்மா (24 ரன், 38 பந்து, 4 பவுண்டரி) கிறிஸ்டியன் கிளார்க் வீசிய பந்தை சில அடி இறங்கி வந்து தூக்கியடித்த போது கேட்ச்சாகிப் போனார். அடுத்து ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் விராட் கோலி அடியெடுத்து வைத்தார். மறுமுனையில் தொடர்ந்து 2-வது அரைசதம் அடித்த கேப்டன் சுப்மன் கில் 56 ரன்களில் (53 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜாமிசன் வீசிய ஷாட்பிட்ச் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், ஸ்ரேயாஸ் அய்யரும் அணியை தூக்கி நிறுத்துவார்கள் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஸ்ரேயாஸ் அய்யர் 8 ரன்னில் (17 பந்து) பெவிலியன் திரும்பினார். விராட் கோலி 23 ரன்னில் (29 பந்து, 2 பவுண்டரி) கிறிஸ்டியன் கிளார்க் வீசிய பந்தை தட்டி விட முயன்ற போது, அது பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது.

இந்த சூழலில் 5-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலும், ரவீந்திர ஜடேஜாவும் கைகோர்த்தனர். அணியை சரிவில் இருந்து மீட்பதற்காக இருவரும் ஒன்று, இரண்டு வீதம் ரன் எடுப்பதில் கவனம் செலுத்தினர். அணியின் ஸ்கோர் 191-ஐ எட்டிய போது ஜடேஜா (27 ரன், 44 பந்து, ஒரு பவுண்டரி) பந்து வீசிய பிரேஸ்வெல்லிடேமே பிடிபட்டார்.

இன்னொரு பக்கம் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலை கொண்டு ஆடிய லோகேஷ் ராகுல் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி சவாலான ஸ்கோரை அடைய வழிவகுத்தார். 49-வது ஓவரில் சிக்சருடன் ராகுல் தனது 8-வது சதத்தை நிறைவு செய்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 284 ரன்கள் சேர்த்தது. ராகுல் 112 ரன்களுடனும் (92 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்), சிராஜ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர் 285 ரன் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டிவான் கான்வே (16 ரன்), ஹென்றி நிகோல்ஸ் (10 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. ஆனால் 3-வது விக்கெட்டுக்கு கூட்டணி போட்ட வில் யங்கும், டேரில் மிட்செல்லும் அவசரப்படாமல் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு விரட்டுவதும், மற்றபடி ஒன்று, இரண்டு வீதம் எடுப்பதும் என திட்டமிட்டு செயல்பட்டனர். 

இவர்கள் 3-வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் திரட்டி வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். வில் யங் 87 ரன்களில் (98 பந்து, 7 பவுண்டரி) குல்தீப் யாதவின் சுழலில் சிக்கினார். 80 ரன்னில் எளிதான கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய டேரில் மிட்செல் தனது 8-வதுசதத்தை பூர்த்தி செய்தார்.

நியூசிலாந்து அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 286 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேரில் மிட்செல் 131 ரன்களுடனும் (117 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), கிளென் பிலிப்ஸ் 32 ரன்களுடனும் (25 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை நியூசிலாந்து 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 18-ந்தேதி இந்தூரில் நடக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory