» சினிமா » திரை விமர்சனம்

விக்ரம் பிரபு நடித்துள்ள சிறை படத்தின் விமர்சனம்

புதன் 24, டிசம்பர் 2025 5:02:11 PM (IST)


ஒரு கொலை வழக்கில் சிக்கும் எல்.கே.அக்‌ஷய்குமார், வேலூர் சிறையில் பல ஆண்டுகளாக விசாரணை கைதியாக இருக்கிறார். அவரை சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக விக்ரம் பிரபு உள்ளிட்ட காவலர்கள் அரசு பஸ்சில் அழைத்துச் செல்கிறார்கள்.

செல்லும் வழியில் ஒரு கிராமத்தில் நடக்கும் எதிர்பாராத பிரச்சினையில் காவலர்கள் சிக்கிக்கொள்ள, போலீஸ் துப்பாக்கியுடன் எல்.கே.அக்‌ஷய்குமார் தப்பி விடுகிறார். எல்.கே.அக்‌ஷய்குமாரை தேடி செல்லும் போலீசாருக்கு அவரை பற்றிய பல உண்மைகள் தெரியவர அதிர்கிறார்கள்.

எல்.கே.அக்‌ஷய்குமார் பிடிபட்டாரா? அவரது பின்னணி என்ன? அவரால் விக்ரம் பிரபு சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன? என்ற பல்வேறு கேள்வி முடிச்சுகளுக்கு விடை சொல்கிறது பரபரப்பான மீதி கதை.

நடிப்பில் முதிர்ச்சி காட்டி வியக்க வைத்திருக்கும் விக்ரம் பிரபு, நிஜமான போலீஸ்காரராகவே நெஞ்சில் பதிகிறார். மனசாட்சிக்கும், மனிதாபிமானத்துக்கும் இடையே சிக்கும் இடங்களில் இயல்பான நடிப்பாலும் அலங்கரிக்கிறார். இந்த புதிய விக்ரம் பிரபு இனியும் தொடரவேண்டும்.

எல்.கே.அக்‌ஷய்குமார் தமிழ் சினிமாவுக்கு நல்வரவு. பருவத்துக்கேற்ற அவரது தோற்றத்தின் மாற்றமும், அச்சுபிசகாத நடிப்பும் கவனிக்க வைக்கிறது. சில இடங்களில் உணர்ச்சிகளால் கலங்கடித்து விடுகிறார். அனிஷ்மா அனில்குமாரின் குழந்தைத்தனமான சிரிப்பும், அனந்தா தம்பிராஜாவின் அளவான நடிப்பும் சிறப்பு. ஹரிசங்கர் நாராயணன், ரகு இசக்கி, மூணாறு ரமேஷ் உள்ளிட்டோரின் நடிப்பிலும் குறையில்லை. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் படத்தின் விறுவிறுப்புக்கு துணை நிற்கிறது.

பரபரப்பான திரைக்கதை பலம். சில இடங்களில் காட்சிகளில் தொய்வு தென்படுகிறது, யூகிக்கவும் முடிகிறது. ஆங்காங்கே லாஜிக் மீறலை தவிர்த்திருக்கலாம். டைரக்டர் தமிழ் எழுதிய இந்த கதையில் பரபரப்பும், விறுவிறுப்பும் கூட்டியதுடன், காவல்துறையில் நிலவும் அரசியலையும் ‘நறுக்' என்று சொல்லி குட்டு வைத்திருக்கிறார், இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory