» சினிமா » செய்திகள்

ஜெய் பீம் திரைப்படத்திற்கு தமிழக அரசின் 7 விருதுகள் அறிவிப்பு: இயக்குநர் த.செ.ஞானவேல் நன்றி!

சனி 31, ஜனவரி 2026 5:45:27 PM (IST)


சிறந்த படம், சிறந்த இயக்குநர் உட்பட 7 பிரிவுகளில் விருதுகளை வென்ற ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் த.செ.ஞானவேல் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். 

2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், மேலும் 2015-2016 கல்வியாண்டு முதல் 20212022 கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விருதுகள், அடுத்த மாதம் 13ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.

இதன் அடிப்படையில், திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்கள் ஆகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகள் ஆகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 'மாநகரம்', 'அறம்', 'பரியேறும் பெருமாள்', 'அசுரன்', 'கூழாங்கல்', 'ஜெய் பீம்', 'கார்கி' ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சிறந்த படம், சிறந்த இயக்குநர் உட்பட 7 பிரிவுகளில் விருதுகளை வென்ற ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் த.செ.ஞானவேல் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக இயக்குநர் த.செ.ஞானவேல் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

ஜெய்பீம் திரைப்படம் வெளியானதும் நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் படம் பார்த்து நெகிழ்ந்து பாராட்டினார். பழங்குடி மக்களுக்கான அரசின் திட்டங்கள் உரியவர்களுக்கு விரைந்து சென்றடையச் சிறப்பு உத்தரவு பிறப்பித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது பயன்பெற்றவர்கள் என்னைச் சந்தித்து நெகிழ்ந்து நன்றி சொல்வர். அப்போதெல்லாம் படைப்பின் நோக்கம் நிறைவேறுவதை எண்ணி மனநிறைவு அடைவேன்.

இப்போது 2021-ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக ஜெய்பீம், தமிழ்நாடு அரசின் விருதினைப் பெறுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். மேலும், சிறந்த இயக்குநர் உட்பட ஏழு விருதுகளைத் திரைப்படம் வென்றிருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த அங்கீகாரத்தை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், விருது தேர்வுக் குழுவுக்கும் மனம்நிறைந்த நன்றிகள்.

திரைப்படத்தின் நோக்கம் நிறைவேறவும், உரிய அங்கீகாரம் கிடைக்கவும் துணைநின்ற அனைவரையும் நன்றியுடன் வணங்குகிறேன். ஜெய்பீம் கதையைக் கேட்டுத் தயாரிக்க முன்வந்ததோடு, நீதிநாயகம் சந்துரு அவர்களின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இத்திரைப்படத்தைப் பல உயரங்களுக்கு அழைத்துச் சென்ற சூர்யா அவர்களுக்கும், ஜெய்பீம் ஆக்கத்திற்கு உடன் உழைத்த சக தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், 2டி தயாரிப்பு நிறுவனத்திற்கும் என் மனம் நெகிழ்ந்த அன்பும்... நன்றியும்... எளிய மக்களின் சட்டப்பூர்வப் பாதுகாப்புக்குச் சமரசமில்லாமல் உழைக்கும் நீதிநாயகம் கே.சந்துரு, பேராசிரியர் பிரபா கல்விமணி (பா.கல்யாணி), பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் என் வணக்கம்.

ஜெய்பீம் படத்தைக் கொண்டாடிய, அதன் வெற்றியை உறுதிசெய்த ஊடக நண்பர்களுக்கும், மக்களுக்கும் இந்த மகிழ்வான நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 2016 - 2022ஆம் ஆண்டு வரை வெளியாகி விருது பெறும் அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory