» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரயிலில் கடத்திய ரூ.2 கோடி கஞ்சா ஆயில் பறிமுதல் : ரயில்வே ஒப்பந்த ஊழியர் கைது

ஞாயிறு 14, ஜனவரி 2024 11:37:12 AM (IST)

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு ரயிலில் கடத்திய ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ரயில்வே ஒப்பந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

ஜார்கண்ட் மாநிலம் டாட்டா நகரில் இருந்து சேலம் வழியாக எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா ஆயில் கடத்துவதாக நேற்று முன்தினம் மாலை சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த ரயிலில் இன்ஸ்பெக்டர்கள் பாபு சுரேஷ்குமார் (போதைப்பொருள் தடுப்பு பிரிவு), மீனா ராஜேந்திரகுமார் (ரயில்வே பாதுகாப்பு படை) ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அந்த ரயில் மாலை 6.30 மணிக்கு ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் போலீசார் குளிர்சாதன பெட்டியில் ஏறி சோதனை நடத்தினர். முன்பதிவு செய்த பயணிகளுக்கு வழங்கப்படும் தலையணைகள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது தலையணைக்குள் 2 லிட்டர் கஞ்சா ஆயில் பாலித்தீன் கவரில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ரயில்வே ஒப்பந்த ஊழியரான மேற்கு வங்காள மாநிலம் பாண்டாபேஸ்வர் தாலுகா டெஸ்லோபா பகுதியை சேர்ந்த தீபக் சேத்தி (31) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா ஆயில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 2 லிட்டர் கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 கோடி என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் தீபக்சேத்திக்கு கஞ்சா கொடுத்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory