» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சாலையில் இறங்கி தர்ணாவில் ஈடுபட்ட ஆளுநர்: கேரளாவில் பெரும் பரபரப்பு

சனி 27, ஜனவரி 2024 5:26:20 PM (IST)



கேரளாவில் ஆளுநர்  ஆரிப் முகமது கான் தனது காரில் இருந்து கீழே இறங்கி 2 மணிநேரம் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, கேரள அரசுக்கும் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் நீண்ட நாட்களாக மோதல்போக்கு நிலவி வருகிறது. 

சமீபத்தில் கேரள சட்டசபை கூட்டத் தொடரின்போது மாநில அரசின் கொள்கைகள் அடங்கிய உரையை வாசிக்காமல் உரையின் கடைசி பத்தியை மட்டும் வாசித்துவிட்டு சில நிமிடங்களில் சட்டசபையில் இருந்து ஆளுநர் ஆரிப் முகமது கான் வெளியேறினார். இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா பகுதியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இன்று மதியம் ஆளுநர் ஆரிப் முகமது கான் காரில் சென்றுகொண்டிருந்தார். ஆனால், கொட்டாரக்கராவில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பினர் (எஸ்.ஐ.எப்.) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலம்மல் பகுதியில் ஆளுநரின் கார் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் இருபுறமும் கூடியிருந்த எஸ்.ஐ.எப். அமைப்பினர் ஆளுநரின் வருகைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த ஆளுநர் ஆரிப் முகமது கான் தன் காரில் இருந்து கீழே இறங்கி சாலையில் நடந்து சென்றார்.

பரபரப்பான எம்.சி. சாலையில் காரில் இருந்து கீழே இறங்கிய ஆளுநர் ஆரிப் முகமது கான் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி சென்றார். அப்போது, சாலையோரம் குவிந்திருந்த போராட்டக்காரர்கள் ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதனால், ஆத்திரமடைந்த ஆளுநர் ஆரிப் முகமது கான் சாலையோரம் இருந்த டீக்கடைக்கு சென்று ஒரு இருக்கையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசாரை கடுமையாக சாடினார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிப்பதாக குற்றஞ்சாட்டிய ஆளுநர், போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அதற்கான ஆதாரத்தை காட்டவில்லையென்றால் இங்கிருந்து நகரப்போவதில்லை என்று எச்சரிக்கை விடுத்தார். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை முதல்-மந்திரி பினராயி விஜயன் ஊக்குவிப்பதாக குற்றஞ்சாட்டிய ஆளுநர், போலீஸ் உயர் அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் இல்லையேல் பிரதமர் அலுவலகத்திற்கு அழைப்பு விடுங்கள் என்று உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஆளுநர் தர்ணாவில் ஈடுபட்டிருந்த பகுதிக்கு விரைந்து வந்த போலீஸ் உயர் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கான எப்.ஐ.ஆர். ஆவணத்தை சமர்ப்பித்தனர். இதனை தொடர்ந்து டீக்கடையில் 2 மணிநேரமாக காத்திருந்த ஆளுநர் ஆரிப் முகமது தனது தர்ணாவை முடித்துக்கொண்டு கொட்டாரக்கராவுக்கு புறப்பட்டு சென்றார்.

இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுடன் கூடிய இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory