» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட 4 பேருக்கு பாரத ரத்னா விருது: ஜனாதிபதி வழங்கினார்

சனி 30, மார்ச் 2024 12:13:40 PM (IST)

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட 4 பேருக்கு பாரத ரத்னா விருதினை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வழங்கினார். சுவாமிநாதனுக்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது மகள் நித்யா ராவ் பெற்றுக்கொண்டார்.

சமுதாய வளர்ச்சிக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களை மறக்காமல் கவுரவிப்பது இந்தியாவின் பண்பு. அந்தவகையில், மத்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், 'பாரத ரத்னா' விருதுதான் நாட்டிலேயே மிக உயரிய விருதாகும். முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஐந்து தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

பீகார் மாநில முதல்-மந்திரியாக இருந்த சமூக சீர்திருத்தவாதியான மறைந்த கர்பூரி தாக்கூர், பா.ஜனதா தலைவராகவும், துணை பிரதமராகவும் பணியாற்றிய 96 வயது எல்.கே.அத்வானி, மறைந்த பிரதமர் சவுத்ரி சரண்சிங், மறைந்த பிரதமர் பி.வி.நரசிம்மராவ், தமிழ்நாட்டை சேர்ந்த மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உயரிய விருதான பாரத ரத்னா விருதினை எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட 4 பேருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வழங்கினார். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது மகன் பி.வி.பிரபாகர் ராவ் பெற்றுக் கொண்டார். அதேபோல மறைந்த முன்னாள் பிரதமர் சவுத்ரி சரன்சிங்கிற்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது பேரன் ஜெயந்த் சிங் பெற்றுக்கொண்டார்.

மறைந்த வேளாண் விஞ்ஞானி தமிழகத்தை சேர்ந்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது மகள் நித்யா ராவ் பெற்றுக்கொண்டார். மறைந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி கர்பூரி தாக்கூருக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவரது மகன் ராம்நாத் தாக்கூர் பெற்றுக் கொண்டார். பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு வீடு தேடி பாரத ரத்னா விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory