» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெருநாய்களை காப்பகத்துக்கு அனுப்ப தடை : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:25:38 AM (IST)
வெறித்தனமான நாய்கள், ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்களை தவிர மற்ற நாய்களை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. தெரு நாய்கள் அதிகரிப்பதால் பொது மக்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் தெரு நாய்கள் கடி அதிகளவு பதிவாகியுள்ளது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
முக்கியமாக குழந்தைகளை அதிகம் குறி வைத்து தெரு நாய்கள் கடிக்கின்றன. இதனால் ரேபிஸ் நோய் பாதித்து உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. தெரு நாய்களின் பாதிப்பு இல்லாத மாநிலமே இல்லை. எப்படியாவது இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தலைநகர் டெல்லியிலும் தெரு நாய்கள் பிரச்சனை அதிகளவு உள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் 37.15 லட்சம் நாய் கடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சராசரியாக ஒரு நாளுக்கு 10,000 நாய் கடி சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெறுகின்றன.
கடந்த வருடம் மட்டுமே நாய் கடி சம்பவத்தால் இந்தியாவில் 305 பேர் உயிரிழந்திருந்தனர். எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றம், தெரு நாய்களை காப்பகங்களில் இருந்து வெளியேற்றுவதற்கு தடை விதித்திருந்தனர்.
மேலும், டெல்லியில் உள்ள தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைத்து எட்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேநேரத்தில் நாய் பிரியர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிறகு இந்த வழக்கின் விசாரணை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்பாடு தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தனர். மேலும் ஆகஸ்ட் 22 ஆம் தேதியான இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தெரு நாய்களை காப்பகத்திற்கு அனுப்பும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கருத்தடை செய்து மற்றும் தடுப்பூசி செலுத்திய பிறகு பிடிக்கப்பட்ட இடத்திலேயே தெருநாய்களை விடவும் உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக இரு நீதிபதிகள் அளித்த உத்தரவில், தெரு நாய்களை காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இதை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல் முறையீடு செய்திருந்தனர். அதில் நாய்களை காப்பகத்தில் அடைக்கும் உத்தரவுக்கு தடை கேட்டிருந்தனர். அதன்படி தெரு நாய்களை காப்பகத்திற்கு அனுப்பும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என். வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில்; தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை ஊசி மற்றும் உரிய தடுப்பூசிகள் செலுத்தி மீண்டும் தெருவிலேயே விடலாம். ரேபிஸ், தொற்று உள்ள நாய்களை மட்டும் காப்பகத்தில் அடைக்க வேண்டும். தெருக்களில் நாய்களுக்கு உணவளிக்க தனி இடத்தை ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் உணவளிக்கக் கூடாது.
அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் உள்ள தெரு நாய் விவகார வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெரு நாய்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் பொருந்தக் கூடிய ஒட்டுமொத்த வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தப்படும். இது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பொறியாளர்கள் முக்கிய பங்கு: பிரதமர் வாழ்த்து
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:32:03 AM (IST)

மிசோரம் மாநிலத்தின் முதல் ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
சனி 13, செப்டம்பர் 2025 12:51:08 PM (IST)

ஜக்கி வாசுதேவ் போன்ற போலி வீடியோ உருவாக்கி பெண்ணிடம் ரூ.3.75 கோடி நூதன மோசடி!
சனி 13, செப்டம்பர் 2025 12:30:17 PM (IST)

தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துள்ளது: கனிமொழி விமர்சனம்
சனி 13, செப்டம்பர் 2025 12:06:12 PM (IST)
