» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
வியாழன் 20, நவம்பர் 2025 3:31:43 PM (IST)
மசோதாவுக்கு பதிலளிக்காமல் கிடப்பில் போட ஆளுநர்களுக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்புடைய வழக்கில், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை அறிவித்தது.
அரசியல் சாசன அமர்வின் நீதிபதிகள் அனைவரும் ஒருமனதாக தீர்ப்பு வழங்குவதாக பி.ஆர்.கவாய் தெரிவித்தார். மேலும், தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், எந்த பதிலும் அளிக்காமல் ஆளுநர்களால் கிடப்பில் போட முடியாது.
கால வரம்பின்றி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசு குறிப்பட்டதை போல் ஆளுநருக்கு 4-வது தெரிவு கிடையாது, 3 தெரிவுகள் மட்டுமே இருக்கின்றன.
மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குதல், நிராகரித்தல் மற்றும் விளக்கத்துடன் சட்டப்பேரவைக்கு அனுப்புதல் அல்லது அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புதல் ஆகிய மூன்று விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்குதான் ஆளுநருக்கு விருப்புரிமை உள்ளது. மசோதவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
ஒரு மாநிலத்துக்கு இரண்டு அதிகார அமைப்புகள் இருப்பதை எங்களால் ஏற்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும்தான் மாநிலத்தில் இயக்கும் முதன்மையான அதிகார அமைப்பாக இருக்க முடியும். ஆளுநர்கள் மாநில அரசுக்கு இடையூறு விளைவிக்கும் நடைமுறைகளை மேற்கொள்ளக் கூடாது. ஒரு மசோதா சட்டமாக மாறும்போது மட்டுமே நீதித்துறை மறு ஆய்வு செய்ய முடியும்.
இதேபோல், நம்மைப் போன்ற ஜனநாயக நாட்டில், ஆளுநர்களுக்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. உச்ச நீதிமன்றத்திற்கு மகத்தான அதிகாரத்தை வழங்கும் பிரிவு 142-ஐ மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க பயன்படுத்த முடியாது.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சார்பாக உச்ச நீதிமன்றத்திற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நன்றி தெரிவித்தார்.
2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு என்ன?
மசோதாக்கள் மீது தமிழக ஆளுநர் குறிப்பிட்ட காலவரம்புக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை எனத் தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.
அதில், ஆளுநர் காலம் தாழ்த்தியது சட்டவிரோதமானது என்றும், அவர் தாமதப்படுத்திய மசோதாக்கள் முன்தேதியிட்டு நிறைவேறியதாகக் கருதப்படும் என்றும் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதிகள் அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டது.
மேலும், அந்தத் தீர்ப்பில் மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒட்டுமொத்தமாக மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் காலக்கெடு விதித்தது.
இந்தத் தீர்ப்பில் தெளிவுரை கோரும் வகையில் 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு கடிதம் அனுப்பினார். அதை வழக்காக விசாரணைக்கு அனுமதித்த தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, கடந்த ஆகஸ்ட் 19 தொடங்கி செப்டம்பர் 11-ஆம் தேதிவரை 10 நாள்களுக்கு விசாரணை நடத்தியது.
அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை வகிக்கும் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக் காலம் வரும் 23-ஆம் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நவம்பர் 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அவரது பணியின் கடைசி நாளாகும். அதற்கு ஒரு தினம் முன்பாக முக்கியத்துவம் வாய்ந்த மசோதா காலக்கெடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீகார் முதல் அமைச்சராக நிதிஷ் குமார் பதவிஏற்பு : பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!
வியாழன் 20, நவம்பர் 2025 4:38:12 PM (IST)
தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்க முயற்சி: ராகுலை கண்டித்து 272 பிரமுகர்கள் கடிதம்!
வியாழன் 20, நவம்பர் 2025 10:32:13 AM (IST)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
புதன் 19, நவம்பர் 2025 5:27:31 PM (IST)

பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை எதிரொலி : டிஜிட்டல் தங்கம் விற்பனை கிடுகிடு சரிவு!
புதன் 19, நவம்பர் 2025 8:37:56 AM (IST)

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை எதிரொலி : இருமல் மருந்து வாங்க புதிய கட்டுப்பாடு!
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:52:54 PM (IST)

பாஜகவினருக்கு ஆயுதங்கள் அளிப்பதை ஆளுநர் நிறுத்த வேண்டும்: திரிணமூல் எம்பி சர்ச்சை பேச்சு..!
திங்கள் 17, நவம்பர் 2025 11:13:22 AM (IST)




