» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேர்தல் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழக நிர்வாகிகளுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:36:39 AM (IST)
தொகுதி பங்கீட்டை தேசிய தலைமையே முடிவு செய்யும் என்றும், தேர்தல் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என்றும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை ராகுல்காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. தேசிய கட்சிகளான பா.ஜனதாவும், காங்கிரசும் இதுகுறித்த ஆலோசனையிலும், விவாதங்களிலும் கட்சியினருடன் தற்போது தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான கூட்டணி கடந்த 2019-ம் ஆண்டில் இருந்ததுபோல் அப்படியே உள்ளது. அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக அதே கூட்டணியில் பயணித்து வந்துள்ளது. இரு கட்சியினரும் சுமுகமாகவே இருந்து வருகிறார்கள். ஆனால் சமீப காலமாக, காங்கிரஸ் கட்சியில் சிலர் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை முன்னெடுத்து உள்ளனர்.
ஆட்சியில் தி.மு.க. பங்கு தரவில்லையென்றால், மாற்று வாய்ப்பாக த.வெ.க.வுடன் ஏன் கூட்டு சேரக்கூடாது? எனவும் அவர்கள் கேட்கிறார்கள். இதனால் என்ன முடிவு எடுப்பது? என காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் தேசிய தலைமை விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கு முன்பும் இது தொடர்பான கூட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான இந்திரா பவனில் நேற்று கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த எம்.பி. ப.சிதம்பரம், தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், சுதா உள்ளிட்ட பல எம்.பி.க்கள், தமிழக பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிவேதிக் ஆல்வா மற்றும் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர் போன்ற முன்னாள் தலைவர்கள் மற்றும் குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள், டாக்டர் செல்லக்குமார் உள்ளிட்ட முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாலை 4.30 மணி அளவில் தொடங்கிய கூட்டம் வெகுநேரம் நீடித்தது. நிர்வாகிகளிடம் தனித்தனியாகவும் கருத்து கேட்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இரவு 8.40 மணி அளவில் கூட்டம் நிறைவடைந்தது. 4 மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடந்துள்ளது. இந்த ஆலோசனையில் புதுச்சேரி நிர்வாகிகளும் தனியாக கலந்து கொண்டனர். புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி தலைமையிலான நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் தி.மு.க. கூட்டணியில் தொடர வேண்டும் என்றும், சிலர் த.வெ..கவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றும் முறையிட்டு உள்ளனர். சிலர் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர். குறைந்தது 3 அமைச்சர்களாவது காங்கிரசுக்கு வேண்டும் என்று அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதுபோல 40-க்கு குறையாத இடங்களில் போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இப்படியாக பல்வேறு விவாதங்களுடன் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. பின்னர் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எங்கள் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோரது தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் எல்லோரையும் அழைத்து கருத்துகளை கேட்டு இருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், காரியக்கமிட்டி உறுப்பினர்கள், முன்னாள் மாநில தலைவர்கள், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது கருத்துகளை சொல்லி இருக்கிறார்கள்.
‘டுவிட்’ போடுவது, அறிக்கை கொடுப்பது போன்றவற்றை மிகவும் வேதனையோடு தெரிவித்தனர். கூட்டணி பற்றி யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது என்றனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்ன முடிவு எடுக்கிறதோ, அந்த முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பின்பற்றும். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது: ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரசின் மூத்த தலைவர்கள், மாநில தலைவர் ஆகியோருடன் விரிவான மற்றும் மிகவும் பயனுள்ள கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு நிர்வாகிகளுடன் தொடக்கத்திலும், முடிவிலும் ஒரு கூட்டுக்கூட்டத்தை நடத்தினோம். தனிப்பட்ட சந்திப்பையும் நடத்தினோம். தலைமை அனைத்து கருத்துகளையும் பொறுமையாகக் கேட்டது. மேலும் தலைவர்கள் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் முழு வாய்ப்பு வழங்கப்பட்டது. கலந்துரையாடல் ஆக்கப்பூர்வமாக இருந்தது.
இந்த கூட்டம் தமிழ்நாட்டில் கட்சியையும், அதன் எதிர்கால யுக்தியையும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. இந்த கூட்டம் காங்கிரஸ் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரிடம் முடிவுகளை எடுக்கும் பொறுப்பை ஒருமனதாக ஒப்படைத்துள்ளது.
தேர்தல் யுக்தி தொடர்பான விஷயங்களைப் பொறுத்தவரை, கட்சி சித்தாந்தம் மற்றும் தமிழக மக்களின் பொதுநலனைக் கருத்தில் கொண்டு, கட்சியின் உயர்மட்டம் உரிய நேரத்தில் பொருத்தமான முடிவை எடுக்கும்.
அதுவரை அனைவரும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊகங்களைத் தவிர்க்கவும், கட்சி முடிவுகளுக்கு ஏற்ப ஒரே குரலில் பேசவும் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் 21-ஆம் தேதி முதல் பாதயாத்திரை தொடங்குவதாகவும், அதில் தலைமை பங்கேற்க போவதாகவும் தெரிவித்தது.இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
சனி 17, ஜனவரி 2026 5:00:23 PM (IST)

தமிழக வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர்., ஆற்றிய பங்கு சிறப்பானது : பிரதமர் மோடி புகழாரம்!
சனி 17, ஜனவரி 2026 11:18:17 AM (IST)

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி: மும்பை, புனே, நாக்பூர் மாநகராட்சிகள் பாஜக வசம்!
சனி 17, ஜனவரி 2026 10:13:06 AM (IST)

இந்தியா தனது எதிர்காலத்தை ஸ்டார்ட்-அப் புரட்சியில் காண்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்!
சனி 17, ஜனவரி 2026 8:41:49 AM (IST)

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி!
சனி 17, ஜனவரி 2026 8:34:16 AM (IST)

