» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உஜ்வாலா மானிய கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4 ஆகக் குறைப்பு: பயனாளிகளுக்கு அதிர்ச்சி!
செவ்வாய் 9, ஜூன் 2026 10:40:06 AM (IST)
'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழ், வழங்கப்படும் மானிய கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 4 ஆகக் குறைக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் மிக முக்கியமான மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றான 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் மானிய கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 4 ஆகக் குறைக்கப்பட்டு உள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாட்டிலுள்ள ஏழை எளிய குடும்பப் பெண்களுக்கு இலவச மற்றும் மானிய விலையிலான சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கும் உஜ்வாலா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், தொடக்கத்தில் 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆண்டுக்கு 12 என்ற எண்ணிக்கையில் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தன.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வரை, சிலிண்டர் ஒன்றுக்கு தலா ரூ. 200 மானியம் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு, அந்தத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டு (DBT) வந்தது. பின்னர், பயனாளிகளின் நலன் கருதி இந்த மாதாந்திர மானியத் தொகை ரூ. 300 ஆக உயர்த்தப்பட்டது. எனினும், கடந்த ஆண்டு இந்த மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை 12-லிருந்து 9 ஆகக் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது அது மேலும் 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சகம் அளித்துள்ள விளக்கம்:
இந்தக் குறைப்பு நடவடிக்கை குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பிரவீன் மால் கனூஜா தெரிவித்துள்ளதாவது: "தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் சூழல்களுக்கு மத்தியில், உஜ்வாலா பயனாளிகளின் சராசரி ஆண்டு நுகர்வுத் தேவையின் (Average Annual Consumption) புள்ளிவிவர விபரங்களோடு இந்த புதிய சிலிண்டர் எண்ணிக்கை பெருமளவில் ஒத்துப்போகிறது.
வளைகுடாப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றச் சூழல் காரணமாக, இந்தியாவில் தற்போது எரிவாயு இறக்குமதியில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, வணிக ரீதியிலான மற்றும் வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது."
சர்வதேசச் சந்தை நிலவரங்களால், கடந்த 3 மாதங்களில் மட்டும் இந்தியாவில் வீட்டுப் பயன்பாட்டுச் சிலிண்டரின் விலை சுமார் ரூ. 100 வரை அதிகரித்துள்ளது. இதன் மூலம் தற்போதைய நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ. 950-ஐத் தாண்டி உயர்ந்துள்ளது. இந்த விலையுயர்விலும், உஜ்வாலா பயனாளிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து ரூ. 300 மானியத்தை வழங்கி வருகிறது.
தற்போது நிலவி வரும் கடுமையான தட்டுப்பாட்டிற்கு மத்தியிலும், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் சிலிண்டர் ஒன்றின் விநியோக நடைமுறைகளுக்காகவும், கொள்முதலுக்காகவும் மத்திய அரசு தரப்பில் சுமார் ரூ. 1,600 வரை செலவிடப்படுகிறது. இவ்வளவு கூடுதல் செலவீனங்களை அரசு ஏற்றுக் கொள்வதனாலேயே, இந்தியக் குடும்பங்கள் சிலிண்டருக்குக் குறைந்த விலையைச் செலுத்திப் பயனடைந்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, சந்தை விலையோடு ஒப்பிடுகையில் உஜ்வாலா பயனாளிகளுக்குச் சிலிண்டர் நுகர்வில் ஆண்டுக்குச் சுமார் ரூ. 1,000 வரை சேமிக்கும் நல்வாய்ப்பு நிலைபெற்றுள்ளது என்று கூடுதல் செயலாளர் பிரவீன் மால் கனூஜா புள்ளிவிவரங்களுடன் விளக்கமளித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீட் விவகாரம்: மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளர் அதிரடி மாற்றம் – சிறப்பு நீதிபதி நியமனம்!
வெள்ளி 24, ஜூலை 2026 12:53:51 PM (IST)

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: தண்டனை நிறுத்தி வைக்க கேரளா உயர் நீதிமன்றம் மறுப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 11:52:19 AM (IST)

மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்று சோனம் வாங்சுக் 26 நாட்கள் உண்ணாவிரதம் வாபஸ்!
வெள்ளி 24, ஜூலை 2026 11:12:52 AM (IST)

ஒட்டிப் பிறந்த சகோதரிகளுக்குத் தனித்தனி தேர்வறை: எஸ்பிஐ தேர்வில் எழுந்த வினோதச் சிக்கல்!
வெள்ளி 24, ஜூலை 2026 10:15:50 AM (IST)

பட்டாசுக்கு முழுத் தடையா? – பசுமை பட்டாசு குறித்து அறிக்கை கேட்கிறது உச்ச நீதிமன்றம்!
வியாழன் 23, ஜூலை 2026 4:10:22 PM (IST)

வினாத்தாள் கசிவு: பிரதமர் மோடியின் அறிவிப்பை நிராகரித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி!
வியாழன் 23, ஜூலை 2026 11:54:40 AM (IST)


