» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வாக்கு, சீட், காணிக்கைத் திருட்டு நடக்கும் மூன்று இன்ஜின் அரசு இது: பாஜகவைச் சாடும் காங்கிரஸ்!

சனி 4, ஜூலை 2026 4:35:46 PM (IST)

JairamRameshJ3.jpg

மத்தியில் ஆளும் பாஜக அரசை வாக்குத் திருட்டு, மாநிலங்களவை சீட் திருட்டு, காணிக்கை திருட்டு ஆகியவை நடைபெறும் மூன்று இன்ஜின் அரசு என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் குறித்து ஜெயராம் ரமேஷ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பாக நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது வெறும் சம்பிரதாயம் மட்டுமே. பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங் அதில் கலந்து கொண்டு கருத்துகளைக் கேட்டாலும், பின்னர் பிரதமர் மற்றும் உள்துறை அலுவலகங்களால் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு வழங்கப்படும் நிகழ்ச்சி நிரல் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. எனவே, இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு எந்த அர்த்தமும் இல்லை.

தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அவர்கள் மீண்டும் கொண்டு வருவார்கள் என்பதை அறிந்தே இந்த மழைக்காலக் கூட்டத் தொடருக்குச் செல்கிறோம். பல முயற்சிகள் செய்தும் அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால், இப்போது பழிவாங்கும் நடவடிக்கையாகக் கட்சிகளைப் பிளக்கிறார்கள். இந்தியாவின் அரசியலமைப்பை மாற்றுவதே அவர்களின் உண்மையான நோக்கம். 400 இடங்களைக் கடக்க முயன்றதன் நோக்கமே சமூக நீதி தொடர்பான இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்காகத்தான்.

இந்திய தலைமை நீதிபதிக்கு இண்டியா கூட்டணி எழுதிய கடிதம் குறித்துப் பேசுகையில், தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான செயல்பாடு குறித்த கவலைகளை வெளிப்படுத்தவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நமது தேர்தல் அமைப்பின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை சிதைந்து போயுள்ளது. மேற்கு வங்கம், பிஹார், மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகள், உள்துறை மற்றும் பிரதமரிடம் இருந்து தேர்தல் ஆணையம் உத்தரவுகளைப் பெறுகிறது என்பதையே காட்டுகின்றன.

ராமர் கோயில் பெயரால் வாக்குகள் பெறப்பட்டு, தற்போது ராமர் பெயரே களங்கப்படுத்தப்படுகிறது. கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் அயோத்தியில் நன்கொடைகள் திருடப்பட்ட விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களின் இந்த அறக்கட்டளைகளில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களைப் பற்றிப் பிரதமருக்கும் உள்துறை அமித் ஷாவுக்கும் தெரியாதா? வாக்குத் திருட்டு, மாநிலங்களவை சீட் திருட்டு, காணிக்கைத் திருட்டு ஆகியவை நடக்கும் மூன்று இன்ஜின் அரசு இது.

சீனாவுக்கான நமது ஏற்றுமதி வளராமல், இறக்குமதி அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அது 115 பில்லியன் டாலராக அதிகரித்தது. வர்த்தகப் பற்றாக்குறை சாதனை அளவை எட்டியுள்ளதைக் கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதுகாப்புச் சிக்கல்கள் நிறைந்த சீனா விவகாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை குறித்து கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க அவர்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை" என்று ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory