» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் : 9 பேர் பலி

வியாழன் 23, நவம்பர் 2023 4:55:52 PM (IST)

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 9பேர் உயிரிழந்துள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) மற்றும் பிற பயங்கரவாத இயக்கங்கள் ஆகியவை பயங்கரவாத தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை (நவ. 22) பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் வடமேற்கு பாகிஸ்தானின் வடக்கு வஸிரிஸ்தான், தெற்கு வஸிரிஸ்தான் மற்றும் பஜௌர் ஆகிய மாவட்டங்களில், நான்கு வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் இரு ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர்.

வடக்கு வஸிரிஸ்தான் மாவட்டத்தில் ராஸ்மக் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சம்பவத்தில், தெற்கு வஸிரிஸ்தான் மாவட்டத்தின் வானா பகுதியில் உள்ள ஒரு கடையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர்.

அதேபோல, பஜௌர் மாவட்டத்தில் நடைபெற்ற இருவேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில், உள்ளூர் ஜாமியாத்-உலெமா-இ-இஸ்லாம்(ஜேயுஐ-எப்) தலைவரின் தந்தை உள்பட மொத்தம் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்தநிலையில், பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில், பயங்கரவாதிகளை வேரறுக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ராணுவம் தீவிரமாக இறங்கியுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory