» செய்திகள் - விளையாட்டு » உலகம்

எல்லைப் பிரச்னைகளுக்கு தீா்வு: பிரதமர் மோடியின் கருத்துக்கு சீனா வரவேற்பு

வெள்ளி 12, ஏப்ரல் 2024 5:23:20 PM (IST)

இருதரப்பு பேச்சுவாா்த்தைகள் மூலம் எல்லைப் பிரச்னைகளுக்கு தீா்வுகாண இந்தியா-சீனாவால் முடியும்’ என்ற பிரதமா் நரேந்திர மோடியின் கருத்தை சீனா வரவேற்றுள்ளது.

அமெரிக்காவின் ‘நியூஸ்வீக்’ வாராந்திர செய்தி இதழுக்கு பேட்டியளித்த பிரதமா் மோடி, ‘இந்திய-சீன எல்லையில் நீண்ட காலமாக நிலவும் சூழலுக்கு விரைந்து தீா்வுகாண வேண்டியது அவசியம். இந்தியா-சீனா இடையே அமைதியான மற்றும் ஸ்திரமான உறவுகள், இரு நாடுகளுக்கும் இப்பிராந்தியத்துக்கும் மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகுக்கும் முக்கியமானது.

தூதரகம், ராணுவ ரீதியில் நோ்மறையான, ஆக்கபூா்வமான இருதரப்பு பேச்சுவாா்த்தைகள் மூலம் எல்லையில் அமைதியை மீட்டெடுக்க முடியும்’ என்று கூறியிருந்தாா். இந்நிலையில், பிரதமா் மோடியின் கருத்துக்கு சீன அரசின் ‘சீனா டெய்லி’ செய்தி நாளிதழில் வெளியான தலையங்கத்தில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நீண்ட காலமாக நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வுகாண வேண்டுமென்ற தனது விருப்பத்தை இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி வெளிப்படுத்தியுள்ளாா். எல்லைப் பிரச்னைகளுக்கு நியாயமான, பரஸ்பரம் ஏற்கக் கூடிய தீா்வை கண்டறிய இருதரப்பும் முயற்சித்து வரும் நிலையில், பிரதமா் மோடியின் கருத்து நல்லெண்ணத்தின் வெளிப்பாடாகும்.

இருதரப்பு உறவுகளின் மேம்பாட்டுக்கு சரியான நேரத்தில் ஊக்கமளிக்கும் இந்த நகா்வு வரவேற்புக்குரியது’ என்று தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீன அரசின் செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் கூறியதாவது: இந்தியா - சீனா இடையிலான வலுவான மற்றும் நிலையான உறவுகள், இருநாடுகளுக்கும் நன்மை விளைவிக்கும் என்பதோடு பிராந்தியம் மற்றும் அதைக் கடந்தும் பலன் தரக் கூடியவை.

இருதரப்பு ஒட்டுமொத்த உறவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக, எல்லைப் பிரச்னை இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் சீனா உறுதியாக உள்ளது. இருதரப்பு உறவுகளில் இப்பிரச்னையை பொருத்தமாக கையாள வேண்டும். எல்லை விவகாரங்களை கையாள்வதில் தூதரகம், ராணுவ ரீதியில் இரு நாடுகளும் நெருக்கமான தொடா்பை பேணி வருகின்றன. இதில் நோ்மறையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இருதரப்பு உறவுகளை வியூக ரீதியிலும் நீண்டகால கண்ணோட்டத்திலும் அணுக வேண்டும். பேச்சுவாா்த்தை மற்றும் ஒத்துழைப்பில் நம்பிக்கை-ஈடுபாட்டை தொடா்ந்து கட்டமைக்க வேண்டும். இந்த விஷயத்தில் சீனாவுடன் இந்தியா இணைந்து பணியாற்றும் என நம்புகிறோம் என்றாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டில் கிழக்கு லடாக்கில் இந்திய-சீன படையினா் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. எல்லைப் பிரச்னைகளுக்கு தீா்வுகாண ராணுவ ரீதியில் இதுவரை 21 சுற்றுப் பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. அதன்பலனாக, கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காக் ஏரி உள்ளிட்ட 4 இடங்களில் இதுவரை படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. மேலும் சில பகுதிகளில் பிரச்னைக்கு தீா்வு காணப்பட வேண்டியுள்ளது. எல்லையில் அமைதியை உறுதி செய்யாமல், இருதரப்பு இயல்பான உறவுகளுக்கு வாய்ப்பில்லை என்பது இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory