» செய்திகள் - விளையாட்டு » உலகம்
புயல் வருகிறது, யாராலும் தடுக்க முடியாது – ஈரானுக்கு ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை!
வெள்ளி 1, மே 2026 11:28:03 AM (IST)
ஈரான் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்துள்ள "புயல்” எச்சரிக்கை, மேற்கு ஆசியப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நிலவும் இழுபறிக்கு மத்தியில், ஈரானை நோக்கி அமெரிக்கா தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அமலில் உள்ள சூழலில், அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கையில் அதிநவீன துப்பாக்கியுடன் அவர் நிற்பது போன்றும், அவருக்குப் பின்புறம் குண்டுகள் வெடித்துச் சிதறுவது போன்றும் அந்தப் புகைப்படம் அமைந்துள்ளது.அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: "அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. அந்த நாடு விரைவில் புத்திசாலித்தனமான முடிவை எடுக்க வேண்டும். இனிமேல் என்னால் பொறுமை காக்க முடியாது; தொடர்ந்து நல்லவனாக இருக்கவும் மாட்டேன்.”
இதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களில், "புயல் வந்து கொண்டிருக்கிறது. இந்த புயலை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது” என அவர் மற்றொரு பதிவை வெளியிட்டார்.
ரகசியத் திட்டம் மற்றும் ராணுவ வியூகம்
அதிபர் ட்ரம்பின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் மீது ஒரு மிகப்பெரிய தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் தயாராகி வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் முக்கிய எரிசக்தி நிலையங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
வியூக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பறிமுதல் செய்ய ரகசியத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்யாவின் நிலைப்பாடு மற்றும் ஊகங்கள்
சமீபத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து, அதிபர் ட்ரம்பும் புதினும் தொலைபேசியில் ஆலோசித்தனர். இது குறித்துப் பேசிய ட்ரம்ப், ஈரானின் யுரேனியம் விவகாரத்தில் ரஷ்யா உதவும் என்று புதின் வாக்குறுதி அளித்ததாகத் தெரிவித்தார்.
இருப்பினும், ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் இதனை மறுத்துள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவிற்கு எந்தப் பரிந்துரையும் ரஷ்யா வழங்கவில்லை என்றும், உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் வெறும் ஊகங்களே என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மே 9-ஆம் தேதி ரஷ்யாவின் வெற்றி தினத்தை முன்னிட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ட்ரம்பின் இந்த எச்சரிக்கை சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவுடன் தனித்துவமான ராஜாங்க உறவு: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நெகிழ்ச்சி
வெள்ளி 29, மே 2026 5:04:36 PM (IST)

காசா நகரில் இஸ்ரேல் தாக்குதல்: புதிய ஹமாஸ் தளபதி முகமது ஒடே கொல்லப்பட்டார்!
வியாழன் 28, மே 2026 8:34:43 PM (IST)

சமூக வலைத்தளங்களில் வைரலான 'டிரம்ப்' எருமை: பக்ரீத் குர்பானியிலிருந்து தப்பியது!
வியாழன் 28, மே 2026 10:32:31 AM (IST)

நரேந்திர மோடி எனது சிறந்த நண்பர்; என்னை இந்தியா 100 சதவீதம் நம்பலாம்: ட்ரம்ப் சொல்கிறார்!
செவ்வாய் 26, மே 2026 4:47:41 PM (IST)

பாகிஸ்தானில் கொடூரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல்; 30 பேர் பலி!
திங்கள் 25, மே 2026 8:54:13 AM (IST)

சுற்றுலாப் பயணிகளுக்குத் தாய்லாந்து வைத்த செக்: விசா விலக்கு பட்டியலிலிருந்து இந்தியா நீக்கம்
சனி 23, மே 2026 5:50:24 PM (IST)


