» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அச்சன்கோவில் ஆபரண பெட்டிக்கு தென்காசியில் உற்சாக வரவேற்பு!

ஞாயிறு 17, டிசம்பர் 2023 10:36:51 AM (IST)



தென்காசி மாவட்டத்திற்கு வந்த கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோவில் திருஆபரணப் பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

கேரள மாநிலம் அச்சன்கோவிலில் அரசன் ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மகோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மகோற்சவ திருவிழா  17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மகோற்சவ திருவிழாவின் போது ஐயப்பனுக்கு திரு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை வழிபாடு நடைபெறுவது வழக்கம். ஐயப்பனின் திரு ஆபரணங்கள் கேரள மாநிலம் புனலூர் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

மகோற்சவ திருவிழா தொடங்குவதற்கு முதல் நாள் திருஆபரணப் பெட்டி புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து எடுத்து வரப்படும். இந்த ஆண்டு திரு விழாவிற்காக இன்று புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து திரு ஆபணங்கள் எடுக்கப்பட்டு புனலூர் கிருஷ்ணன் கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

பின்னர் அச்சன்கோவில் ஐயப்பன் திரு ஆபரணங்கள், கருப்பன் திரு ஆபரணங்கள், ஆரியங்காவு ஐயப்பன் கோவில் திரு ஆபரணங்கள் அடங்கிய பெட்டிகள் சிறப்பு வாகனத்தில் மேளதாளம் முழங்க ஏற்றப்பட்டது. இந்த திரு ஆபரணங்கள் ஏற்றப்பட்ட வாகனம் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலுக்கு வந்ததும், அக்கோவிலின் திரு ஆபரணங்கள் கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர் அங்கிருந்து புளியரை வழியாக தென்காசி மாவட்டத்திற்கு திருஆபரண வாகனம் வந்தது. புளியரை, செங்கோட்டை, இலஞ்சி ஆகிய இடங்களில் திருஆபரணப் பெட்டிக்கு ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட திருஆபரண வாகனம் தென்காசி காசிவிசுவநாதர் கோவில் முன்பு பிற்பகல் 2.15 மணிக்கு வந்தது. 

அங்கு திருஆபரணப் பெட்டிக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனின் திருஆபரணப் பெட்டியை தரிசனம் செய்தனர். 3.15 மணி அளவில் ஐயப்பனின் திருஆபரண வாகனம் தென்காசியில் இருந்து புறப்பட்டு பண்பொழி, மேக்கரை வழியாக கேரள மாநிலம் அச்சன்கோவிலுக்கு சென்றது. அச்சன்கோவிலில் பொதுமக்கள் திரளாக கூடி திரு ஆபரணத்திற்கு வரவேற்பு அளித்தனர்.

தென்காசியில் காசி விசுவநாதர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருஆபரணப் பெட்டி வரவேற்பு குழு தலைவர் ஏசிஎஸ்ஜி ஹரிஹரன், ஐயப்ப சேவா சங்க தலைவர் அழகிரி, வரவேற்பு குழு நிர்வாகிகள் மாடசாமி ஜோதிடர், சுப்பாராஜ், மணி, சந்திரமோகன், மாரிமுத்து, ராஜகோபாலன், திருமலைக்குமார், அனந்த கிருஸ்ணன், நாராயணன் மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மகோற்சவ விழாவை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு கோவில் முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. கொடியேற்றத்திற்கு பின்னர் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, திரு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

தொடர்ந்து வரும் 25ம் தேதி வரை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள், இரவு சப்பர வீதி உலா நடைபெறுகிறது. மேலும் கருப்பன் துள்ளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 25ம் தேதி தேரோட்டமும், 26ம் தேதி ஆராட்டு விழா நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory