» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தாமிரபரணி கரையோர மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது: பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

வியாழன் 21, டிசம்பர் 2023 7:32:09 AM (IST)

"தாமிரபரணி கரையோர மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது” என்று பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நெல்லைக்கு வந்தார். அவர் நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளுக்கு சென்று மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் மற்றும் சுற்றி உள்ள குடியிருப்புகள், கடைகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இந்த வெள்ளத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுலோச்சன முதலியார் பாலம் கம்பீரமாக இருக்கிறது. ஆனால் மேலநத்தம் -கருப்பந்துறை இடையே 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பாலம் இடிந்து விட்டது.

தாமிரபரணி கரையோர மக்களை பாதுகாக்க தமிழக அரசு தவறிவிட்டது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. நள்ளிரவில் அணையில் இருந்து அதிக தண்ணீரை திறந்து விட்டு உள்ளனர். இதுவே அதிக பாதிப்புக்கு காரணம் ஆகும். முதலில் மக்களுக்கு மின் வினியோகம் வழங்க வேண்டும். குடிநீர், சுகாதார வசதி செய்து கொடுக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 ஆயிரமும், கடைகளுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை வந்து நேரில் பார்க்கவில்லை. மீட்பு பணிகளையும் கவனிக்கவில்லை. மக்களை சந்திக்க வராமல், கூட்டணி குறித்து பேசுவதற்காக அவர் டெல்லிக்கு சென்று உள்ளார். தி.மு.க. அடுத்த தேர்தலுக்கான வியூகத்தை மட்டுமே செய்து வருகிறது. 

மக்களை பற்றி கவலைப்படவில்லை. முதல்-அமைச்சருக்கு மக்களை விட கூட்டணிதான் முக்கியமா?. மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதலில் முதல்-அமைச்சர் வந்து நிற்க வேண்டும். அப்படி நின்றால்தான் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.கள், வேலை செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory