» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருமண உதவித்தொகை வழங்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய சமூகநலத்துறை பெண் அதிகாரி கைது

சனி 30, டிசம்பர் 2023 8:59:45 AM (IST)

நெல்லையில் திருமண உதவித்தொகை வழங்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை பெண் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

நெல்லையை அடுத்த சங்கர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. கணவரை இழந்த இவர் தனது மகள் குமாரி பாண்டியனின் திருமணத்துக்காக, ஈ.வே.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவி திட்டத்தில் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து இருந்தார்.

இதனை பாளையங்கோட்டை யூனியன் அலுவலகத்தில் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலராக பணியாற்றிய பார்வதி மல்லிகா (வயது 58) பரிசீலித்து, திருமண உதவித்தொகை வழங்குவதற்கு ரூ.2,500 லஞ்சம் தருமாறு மகாலட்சுமியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மகாலட்சுமி தனது மகள் குமாரி பாண்டியனிடம் தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத குமாரி பாண்டியன், இதுபற்றி நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.2,500-ஐ குமாரி பாண்டியனிடம் கொடுத்து, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலரிடம் வழங்குமாறு தெரிவித்தனர்.

அதன்படி நேற்று மதியம் குமாரி பாண்டியன் ரசாயனம் தடவிய பணத்துடன் பாளையங்கோட்டை யூனியன் அலுவலகத்துக்கு சென்று, அங்கு பணியில் இருந்த சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பார்வதி மல்லிகாவிடம் கொடுத்தார்.

அப்போது யூனியன் அலுவலக வளாகத்தில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மெகலரின் எஸ்கால், இன்ஸ்பெக்டர் ஞான ராபின்சிங், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், சீதாராமன் மற்றும் போலீசார் கையும் களவுமாக பார்வதி மல்லிகாவை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், சமூக நலத்துறை அலுவலத்திலும், பார்வதி மல்லிகாவின் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

கைதான பார்வதி மல்லிகாவின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் ஆகும். நெல்லையில் திருமண உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory