» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த வாலிபர் பரிதாப சாவு
வெள்ளி 17, மே 2024 8:56:53 AM (IST)
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மருதகுளத்தை சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் சங்கரசுப்பு (35). இவருக்கும், இவரது உறவினர்களுக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மூன்றடைப்பு போலீசார் இருதரப்பினரையும் விசாரணைக்காக அழைத்திருந்தனர். ஆனால், சங்கரசுப்பு நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 13-ந் தேதி காலையில் வந்தார்.
அவர் ஆட்சியர் அலுவலகம் வெளியே நின்றபடி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். மேலும், உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஓடி வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இருந்தபோதும், உடல் கருகிய நிலையில் வலியால் துடித்த அவரை அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் சங்கரசுப்பு பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளித்து உள்ளே ஓடி வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.