» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையில் 9ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை: பள்ளி முன்பு உறவினர்கள் போராட்டம்!

வெள்ளி 5, ஜனவரி 2024 5:39:12 PM (IST)

பாளையில் மாணவன் தற்கொலை செய்த சம்பவத்தில் பள்ளி முன்பு உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருநெல்வேலி மாவட்டம்,  பாளையங்கோட்டை சாந்தி நகர் போலீஸ் காலனியை சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு மனைவி மற்றும் நரேன் (14), சுஜித்(11) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நாகராஜன் தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாளையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 

நரேன் பாளை-திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பும், சுஜித் அதே பள்ளியில் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நரேன் பள்ளிக்கு செல்லவில்லை. அவரது தம்பி சுஜித் மட்டும் பள்ளிக்கு சென்றுள்ளார். அவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். இதனால் நரேன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் மாலையில் நாகராஜன், தனது 2-வது மகனை பள்ளிக்கு சென்று அழைத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டிக்கிடந்துள்ளது. உடனே நாகராஜன் கதவை தட்டியுள்ளார். ஆனால் உள்ளே இருந்த நரேன் கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது நரேன் வேஷ்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவரது உடலை பார்த்து நாகராஜன் அலறி துடித்தார். தகவல் அறிந்து வந்த அவரது மனைவியும் மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து பாளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நரேன் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த தேர்வு ஒன்றில் மிகக் குறைவான மதிப்பெண் எடுத்ததாகவும், இதனால் அவனது பெற்றோரை பள்ளிக்கு அழைத்த நிர்வாகம், நரேனின் படிப்பு குறித்து கூறி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நரேன் மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மாணவன் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகத்தின் நெருக்கடியே காரணம் என குற்றம்சாட்டி மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று பள்ளியின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களுடன் உதவி போலீஸ் கமிஷனர் ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஆர்.டி.ஓ. அயூப்கான், மாவட்ட கல்வி அலுவலர் ராஜா ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் அறிக்கையின்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். எனினும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். திடீரென அவர்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory