» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

ஞாயிறு 7, ஜனவரி 2024 11:46:12 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது. மேலும் பழைய குற்றாலம் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

தமிழகத்தில் அக்டோபா் மாதம் தொடங்கி டிசம்பரில் வடகிழக்கு பருவமழை முடிவடையும். ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியும் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.

மணிமுத்தாறு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தேயிலை தோட்ட பகுதிகளான மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. நேற்று பகலிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை விட்டு, விட்டு பெய்தது.

இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் 142 அடியாக (உச்சநீர்மட்டம் 143) உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,273 கன அடியாக அதிகரித்து உள்ளது.

அணையில் இருந்து கூடுதலாக வினாடிக்கு 1,524 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதேபோல் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 114.30 அடியாக (உச்சநீர்மட்டம் 118) உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,962 கன அடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,560 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றுக்கு செல்லும் கால்வாயில் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதனால் தாமிரபரணி ஆற்றில், அணைகளில் இருந்து மட்டும் 3 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் கடனாநதி, ராமநதி அணைகளின் உபரிநீர் மற்றும் காட்டாற்று தண்ணீர், குளங்களில் மறுகால் பாயும் தண்ணீர் ஆகியவை தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோல் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் அணைக்கட்டில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதன் காரணமாக நெல்லை பகுதியிலும் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் ஓடுகிறது.

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று தலையணை பகுதியில் நீர்வரத்து அதிகரித்து தடுப்பணையை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்து சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். எனினும் நீர்வரத்து தாழ்வான பகுதியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கினர். தொடர்ந்து வனத்துறையினர் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்தது. நேற்று மதியம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையினால் பழைய குற்றாலம் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். எனினும் மெயின் அருவி, ஐந்தருவியில் சீராக தண்ணீர் விழுவதால் அங்கு அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory