» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் திமுக கவுன்சிலர்களை காணவில்லை: பாஜக பரபரப்பு போஸ்டர்!

சனி 13, ஜனவரி 2024 8:09:54 AM (IST)



ஒரு கவுன்சிலர்கூட பங்கேற்காததால், நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் கைவிடப்பட்டதாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தெரிவித்தார்.

நெல்லை மாநகராட்சியில் தச்சநல்லூர், பாளையங்கோட்டை, நெல்லை, மேலப்பாளையம் என 4 மண்டலங்களும், 55 வார்டுகளும் உள்ளன. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் 46 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரும், காங்கிரஸ் கவுன்சிலர்கள் 3 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த தலா ஒரு கவுன்சிலரும் உள்ளனர்.

மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த பி.எம்.சரவணன் உள்ளார். இந்தநிலையில் மேயர் பி.எம்.சரவணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிட்ட 38 கவுன்சிலர்கள் ஆணையாளரிடம் மனு கொடுத்தனர். இதுதொடர்பாக ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், அந்த மனுவில் கையெழுத்திட்ட கவுன்சிலர்களிடம் நேரில் விளக்கம் கேட்டார்.

இதைத்தொடர்ந்து நெல்லை மாநகராட்சி கூட்ட அங்கில் நேற்று காலை 11 மணிக்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு கூட்டம் நடைபெறும் என்று ஆணையாளர் அறிவித்திருந்தார். இதையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மாநகர துணை போலீஸ் கமிஷனர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டது. மேலும் கூட்டத்திற்கு செல்லும் கவுன்சிலர்கள் தங்களுடைய செல்போன்களை வெளியே வைத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு அதற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

கூட்ட அரங்கிற்கு ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் காலை 10.50 மணிக்கு வந்தார். அவருடன் துணை ஆணையாளர் தானுமூர்த்தி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மட்டும் உள்ளே இருந்தனர். காலை 11 மணி முதல் 11.30 மணி வரை கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. இதைத்தொடர்ந்து 11.35 மணிக்கு ஆணையாளர் வெளியே வந்து, கவுன்சிலர்கள் யாரும் வந்துள்ளார்களா? என்று கேட்டார். யாரும் வரவில்லை என்று கூறியதால் மீண்டும் கூட்ட அரங்கிற்குள் சென்றார். பின்னர் அங்கிருந்து 11.40 மணிக்கு ஆணையாளர் வெளியே வந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி நெல்லை மாநகராட்சி மேயர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான கூட்டம் கூட்டரங்கில் காலை 11 மணிக்கு கூட்டப்பட்டது. 11.30 மணி வரை கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை.

எனவே, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி கூட்டம் நடத்துவதற்கான கோரம் இல்லாததால், மேயர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான கூட்டத்தை நடத்தவில்லை. இதனால் மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கைவிடப்பட்டது. சட்டப்படி இன்னும் ஒரு வருடத்திற்கு இந்த தீர்மானத்தை கொண்டு வர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

திமுக கவுன்சிலர்களை காணவில்லை!

இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் குற்றாலம், கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்று இருப்பதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், நெல்லை மாநகராட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த திமுக கவுன்சிலர்களை காணவில்லை! தகவல் சொல்பவருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று பாஜக சார்பில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

m.sundaramJan 16, 2024 - 09:41:53 PM | Posted IP 172.7*****

It is Dravida Model.

JAIHINDJan 13, 2024 - 03:28:12 PM | Posted IP 172.7*****

V.GOOD.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory