» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போலீஸ் எஸ்ஐ., ஏட்டுவை தாக்கிவிட்டு தப்பிய கொள்ளை கும்பல்: நெல்லையில் பரபரப்பு!

திங்கள் 15, ஜனவரி 2024 9:28:38 AM (IST)

நெல்லையில் ரோந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டுவை தாக்கிவிட்டு தப்பிய கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்பேரில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் நெல்லை சந்திப்பு பகுதியில் போலீஸ் உதவி கமிஷனர் ராஜேசுவரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

உதவி கமிஷனரின் ஜீப்பை ஏட்டு சரவண பிரகாஷ் ஓட்டிச் சென்றார். இவர்களது ஜீப்பை பின்தொடர்ந்து பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணனும் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணிக்கு சென்றார். அப்போது நெல்லை பாலபாக்யாநகர் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் கொண்ட மர்மகும்பல் சந்தேகப்படும்படியாக சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து போலீசார் ஜீப்பில் சென்று கண்காணித்தனர்.

அங்குள்ள ஒரு கடையின் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, மர்மகும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை கையும் களவுமாக பிடிப்பதற்காக போலீசார் நெருங்கி சென்றனர். போலீசாரை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அந்த கும்பல் கொள்ளை முயற்சிைய கைவிட்டனர். அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு இருளில் தப்பிச் செல்ல முயன்றனர்.

உடனே சுதாரித்து கொண்ட ஏட்டு சரவண பிரகாஷ் ஜீப்பை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி வேகமாக சென்று கொள்ளையர்களை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவன் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் ஏட்டு சரவண பிரகாஷை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவருக்கு ரத்தம் கொட்டியது.

இதற்கிடையே அங்கு வந்த பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணனும் கொள்ளையர்களை பிடிக்க முயன்றார். அப்போது அவர் மீதும் கொள்ளையர்கள் சரமாரியாக கற்களை வீசி தாக்கினர். இதில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டரும் காயமடைந்தார்.

உடனே கொள்ளையர்கள் 3 பேரும் தங்களது ேமாட்டார் சைக்கிளில் ஏறி, தச்சநல்லூர் நோக்கி மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். போலீசாரை தாக்கி விட்டு கொள்ளை கும்பல் தப்பி சென்றது குறித்து, உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் மாநகர போலீசாரை உஷார்படுத்தினார். கமிஷனர் மூர்த்திக்கும் தகவல் தெரிவித்து, போலீஸ் படையை வரவழைத்தார்.

உடனே அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார், காயமடைந்த ஏட்டு சரவணபிரகாஷ், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொள்ளை குமபல் வந்து சென்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் சேகரித்து ஆய்வு செய்தனர். இதுகுறித்து ஏட்டு சரவண பிரகாஷ் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்கி கொலைமுயற்சியில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 3 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

Train piratesJan 16, 2024 - 02:39:06 PM | Posted IP 172.7*****

TRAIN PIRATES near sankar nagar

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory