» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக கமல் கிஷோர் பொறுப்பு ஏற்பு

செவ்வாய் 30, ஜனவரி 2024 8:26:31 AM (IST)

தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக கமல் கிஷோர் நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். "மக்களின் தேவைகளை அறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.

தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த துரை. ரவிச்சந்திரன் உயர் கல்வித் துறை துணைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனராக பணியாற்றிய கமல் கிஷோர், தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக நேற்று மாலை 6.45 மணிக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் பி.டெக். (பொது நிர்வாகம்) படித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். உதவி ஆட்சியராக திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளிலும், கூடுதல் ஆட்சியராக திருவாரூர் மாவட்டத்திலும் பணியாற்றினார். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் இணை தலைமை செயல் அலுவலராகவும், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவன நிர்வாக இயக்குனராகவும் இருந்துள்ளார். இறுதியாக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார்.

புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர் கமல் கிஷோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: தென்காசி மாவட்ட ஆட்சியராக நான் பொறுப்பேற்றமைக்கு வாய்ப்பளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலும் விவசாயத்தைச் சார்ந்த மாவட்டமாக உள்ளது.

எனவே விவசாயத்தை மேம்படுத்தும் அனைத்து திட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். இதுதவிர மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உரிய அனைத்து திட்டங்களும் நிறைவேற என்னால் முடிந்த வரை முயற்சி செய்து மாவட்டத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். தங்களுக்கு தேவையான கோரிக்கைகளை என்னிடம் மனுவாக கொடுக்கலாம். தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.

அந்த திட்டங்கள் நிறைவேற தடையாக எதுவும் இருந்தால் அதனை சரிசெய்வதற்கு முயற்சி செய்வேன். தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை ஓரளவுக்கு நான் தெரிந்து வைத்துள்ளேன். இன்னும் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களின் தேவைகளை அறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory