» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் 11 புதிய பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

செவ்வாய் 5, மார்ச் 2024 5:38:47 PM (IST)



தென்காசி மாவட்டத்தில் 11 புதிய பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

தென்காசி திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் முன்னிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 11 புதிய பேருந்துகளை புதிய வழித்தடங்களில் துவக்கி வைத்து விபத்தின்றி பணியாற்றிய ஓட்டுநர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்ததாவது,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3000 புதிய பேருந்துகளை வாங்க அனுமதி வழங்கியுள்ளார். முதற்கட்டமாக 100 பேருந்துகளை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையில் 2000 புதிய பேருந்துகள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 309 பேருந்துகள் திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்படவுள்ளது.

முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட மகளிர், மாற்றுத் திறனாளிகள் உதவியாளர் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் " விடியல் பயண திட்டம் " 08.05.2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு சராசரியாக 5,65,760 மகளிரும் 3,342 மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் மற்றும் 285 திருநங்கைகள் பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டம் ஆரம்பிக்கும் போது தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் மிக அதிக அளவாக 70 % மகளிர் பயணம் செய்தனர். தற்போது 80% அளவில் மகளிர் பயணம் செய்து வருகின்றனர். மேலும் மற்ற சகோதர போக்குவரத்து கழகங்களை காட்டிலும் இப் போக்குவரத்துக் கழகத்தில் மகளிர் அதிக அளவு பயணம் செய்து வருகின்றனர். இதற்கு அரசு மானியமாக திருநெல்வேலி போக்குவரத்து கழகத்திற்கு மாதம் ஒன்றுக்கு சுமார் 27.00 கோடி ரூபாய் வழங்கி வருகிறது.

சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் விபத்தின்றி 25 வருடங்கள் பணியாற்றிய 2 ஓட்டுநர்களுக்கு தலா 4 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் 10 வருடங்கள் விபத்தின்றி பணியாற்றிய 43 ஓட்டுநர்களுக்கு தலா 100 கிராம் வெள்ளி நாணயங்களும் வழங்கப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் அரசு நிதியுதவி ரூ.1 இலட்சத்திலிருந்து ரூ.2 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலைவிதிகளை பின்பற்றி விபத்துகளைக் குறைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து, தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வலுவலகத்தின் மூலம் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே வாகனம் ஓட்டுநர் உரிமத்தினை எளிதாக பெற்றுக்கொள்ள முடியும். வரும் காலங்களில், இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வசதிக்கேற்ப சொந்த கட்டடம் அமைக்கப்படும். அதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது என பேசினார்.


இவ்விழாவில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் ஈ.ராஜா ஆலங்குளம் பி.எச்.மனோஜ்பாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், நகர்மன்ற தலைவர்கள் தென்காசி ஆர்.சாதிர், கடையநல்லூர் ஹபிபுர் ரகுமான் தென்காசி நகர்மன்ற துணைத்தலைவர் கே.எல்.என்.சுப்பையா, ஒன்றியக்குழு தலைவர்கள் தென்காசி ஷேக் அப்துல்லா, கீழப்பாவூர் . காவேரி சீனித்துரை, ஆலங்குளம் திவ்யா மணிகண்டன், தென்காசி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் கு.இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory