» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)



திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்பட 1,177 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (1.11.2025) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஈரோடு, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருநெல்வேலி, அரியலூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 1,177 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணிகள் மற்றும் வேலூர் மாவட்டத்தில் 71 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் ரெயில்வே கடவுகளுக்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள இரண்டு சாலை மேம்பாலங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதில்,திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் புறவழிச்சாலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை கல்லிடைக்குறிச்சி பொட்டல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டபேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தலைமையில், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலையில் மரகன்றுகள் நட்டு வைத்து அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான திட்டங்களை அறிவித்து தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அம்பாசமுத்திரத்தில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் அம்பாசமுத்திரம் பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் புறவழிச்சாலையினை காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் நகராட்சி மற்றும் கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சியானது மாநில நெடுஞ்சாலை SH 40 (திருச்செந்தூர் பாளையங்கோட்டை அம்பாசமுத்திரம் தென்காசி குற்றாலம் செங்கோட்டை சாலை) ல் கிமீ 86/2 முதல் கிமீ 92/6 வரை அமைந்துள்ள பகுதிகளாகும். இந்த பகுதிகளில் தொழில், கல்வி, விவசாயம் மற்றும் சுற்றுலாதளம் ஆகியவைகள் அதிகமாக இருப்பதாலும், கடுமையான போக்குவரத்து நெரிசலாலும் விபத்துகள் அடிக்கடி ஏற்படும் வண்ணம் உள்ளது. மேலும், சாலையின் இருபுறங்களிலும் கட்டிடங்களுடன் அதிகமாக மக்கள் வசித்து வரும் பகுதிகளாக உள்ளது. 

எனவே, சாலையினை விரிவு படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், கி.மீ 86/2ல் பிரிந்து கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளை கடந்து கிமீ 92/6ல் முடியுமாறு புறவழிச்சாலை ஒன்று அமைக்க அரசாணை எண். 45 நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை (எச் எஸ்.2) நாள் 29.03.2022-ன் மூலம் ரூ.65.99 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு, இப்புறவழிச்சாலை 6,049 கிமீ நீளமும், 100 மீ அகலமும் கொண்ட இருவழித்தடமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஒரு உயர்மட்ட பாலமும். கன்னடியன் கால்வாயில் ஒரு உயர்மட்ட பாலமும், நதியுன்னி கால்வாய் மற்றும் வாய்க்கால் பகுதிகளில் பெட்டிப் பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மாநில நெடுஞ்சாலை SH 40 வழியாக கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளை கடந்து செல்ல சுமார் 30 நிமிடங்கள் தேவைப்படுகின்ற நிலையிலும் அவ்வப்போது போக்குவரத்து தடைபடவும் வாய்ப்புகள் அதிகம் இருந்தன. தற்போது, அம்பாசமுத்திரம் புறவழிச்சாலையின் மூலம் இந்த பகுதிகளை கடக்க 10 நிமிடங்கள் மட்டுமே ஆகின்றது.

எனவே, பொது போக்குவரத்து தடையில்லாமல் இயங்கவும் பொதுமக்களின் நேர விரயத்தை தவிர்க்கவும். விபத்துக்களை குறைக்கவும் இப்பகுதியில் தொழில் வளர்ச்சிகளை மேம்படுத்தவும் அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று அம்பாசமுத்திரம் புறவழிச்சாலையினை திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இப்பகுதி மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை நபார்டு கண்காணிப்பு பொறியாளர் சாந்தி, கோட்ட பொறியாளர் யுஜின், ராஜசேகர், அம்பாசமுத்திரம் நகராட்சி தலைவர் கே.கே.சி பிரபாகர பாண்டியன், வி.கே புரம் நகராட்சி தலைவர் செல்வசுரேஷ், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பரணி சேகர், உதவி கோட்ட பொறியாளர் பொன்பெருமாள், உதவி பொறியாளார் வெங்கடேஷ், கல்லிடைகுறிச்சி பேரூராட்சி தலைவர் இசக்கிபாண்டி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாலமோன் டேவிட், களக்காடு நகர்மன்ற துணை தலைவர் பி.சி.ராஜன், முக்கிய பிரமுகர் ஜோசப் பெல்சி மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory