» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை : தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது

வியாழன் 15, ஜனவரி 2026 9:05:50 AM (IST)



நெல்லையில் வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை செய்ததாக தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் ஒருவர் கள்ளத்துப்பாக்கியை வாங்கி பதுக்கி வைத்து அதனை வெளியே விற்பனை செய்ய இருப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவில் மேலப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த மேலப்பாளையம் அக்பர் தெருவை சேர்ந்த கபீர் முகைதீன் மகன் அமீர் சுகைல் (26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, அமீர் சுகைல் தனது நண்பரான முசாம்பீர் என்பவருடன் சேர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி சாலையை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரத்தினம்பாலா (40) என்பவரிடம் இருந்து ஒரு கள்ள கைத்துப்பாக்கியை வாங்கி திண்டுக்கல்லில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர்.

ஆனால், அந்த துப்பாக்கியை வாங்கியவர் அது சரியாக சுடவில்லை எனக்கூறி அதனை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். இதனால் அவர்கள் அந்த துப்பாக்கியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்வதற்காக மீண்டும் ரத்தினம் பாலாவிடம் கொடுத்தது தெரியவந்தது. ரத்தினம் பாலா நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க.வில் பொறியாளர் அணியில் பொறுப்பில் இருப்பதும் தெரியவந்தது.

இவர் கடந்த 2020-ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் இருந்து ஒரு கள்ள கைத்துப்பாக்கி வாங்கி கடந்த 4 ஆண்டுகளாக வீட்டிலேயே பதுக்கி வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து, அமீர் சுகைலை கைது செய்தனர். இரவோடு இரவாக ரத்தினம் பாலா வீட்டுக்கு சென்று அவரையும் கைது செய்தனர். 

அவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கைத்துப்பாக்கி, 3 வெடித்த தோட்டாக்கள், ஒரு உடைந்த தோட்டா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று காலையில் முசாம்பீரும் கைதானார். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. திண்டுக்கல்லில் கைத்துப்பாக்கி வாங்கிய நபர் யார்? என்பது குறித்தும், அவரை பிடிக்கவும் போலீசார் விரைந்து உள்ளனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory