» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: திருச்செந்தூர் தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
சனி 16, மே 2026 8:00:33 PM (IST)

தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், விரைவில் நடைபெற உள்ள திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் எனத் திருச்செந்தூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தி.மு.க. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பாகத் தனது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கடந்த வாரம் முறைப்படி ராஜினாமா செய்தார்.
இதனால் அந்தத் தொகுதி தற்பொழுது காலியானதாக அறிவிக்கப்பட்டு, விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், திருச்செந்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்துப் பல அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்: நடந்து முடிந்த பேரவைத் தேர்தல் முடிவுகள் என்பது ஒரு மாயாஜாலம் போன்றதுதான்.
எனினும், தமிழகத்தில் தி.மு.க-வை யாராலும் அசைக்க முடியாத அளவிற்குத்தான் மக்கள் எங்களது கூட்டணிக்குத் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். தவெக தலைவர் விஜய் இன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் என்றால், அதற்குப் பின்னணியில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் மற்றும் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்த சக்திகளின் பங்களிப்பும் உள்ளது என்பதை அவர் மறந்துவிடக் கூடாது.
புதிய முதல்வர் விஜய் தேவையற்ற விவகாரங்களைப் பேச முற்பட்டால், அவரைத் தோற்கடிப்பதற்கான அனைத்து அரசியல் முயற்சிகளையும் தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இரும்புக்கரம் கொண்டு முன்னெடுக்கும். விரைவில் வரவிருக்கும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நமது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களே நேரடியாகக் களம் இறங்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
தலைவர் ஸ்டாலின் அத்தொகுதியில் போட்டியிட்டு, சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று அந்த நடிகரின் முகத்தில் கரியைப் பூச வேண்டும்." என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
ஆதவ் அர்ஜுனா மீதான விமர்சனம் மற்றும் கள ஆய்வு: மேலும், தேர்தல் காலத்தில் ஆளுங்கட்சித் தரப்பில் என்னென்ன தவறுகள் மற்றும் பின்னடைவுகள் நடந்தன என்பது குறித்துத் தி.மு.க. தலைமைக் கழகம் அமைத்துள்ள கள ஆய்வுக் குழுவினர் மூலம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "புதிய அமைச்சரவையில் பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி தொழிலைக் கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டு நினைக்கிறார்" என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் புதிய அரசு அமைந்து இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இதே வாரத்தில், தென் மாவட்டத்தின் முக்கியத் தி.மு.க. முகமான அனிதா ராதாகிருஷ்ணன், புதிய முதலமைச்சர் விஜய்க்கு எதிராகத் திருச்சியில் இடைத்தேர்தல் போர்க் கொடி தூக்கியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கிப் பெண் ஊழியர் நடுரோட்டில் சரமாரி வெட்டிக் கொலை: நெல்லையில் கொடூரம்!
ஞாயிறு 17, மே 2026 11:28:21 AM (IST)

வெள்ள பாதிப்புகளைத் தடுக்கப் போர்க்கால நடவடிக்கை : ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு!
சனி 16, மே 2026 11:07:43 AM (IST)

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)



ஓட்டு போட்டவன்மே 17, 2026 - 08:09:46 AM | Posted IP 172.7*****