» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நடத்தை சந்தேகத்தில் வங்கிப் பெண் ஊழியர் வெட்டிக் கொலை! – தம்பி உட்பட 2 பேர் கைது!

செவ்வாய் 19, மே 2026 8:25:13 AM (IST)

பாளையங்கோட்டையில் வங்கிப் பெண் ஊழியர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது தம்பி உள்பட 2பேடரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள சென்னல்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் முத்துமாலை (35). இவர் ஒரு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்குத் திருமணமாகி 7 வயதில் ஒரு மகள் உள்ளார். முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்த முத்துமாலை, இரண்டாவதாக ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துள்ளார். 

அவரிடமும் தகராறு ஏற்பட்டதால், தனது மகளுடன் நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் கடந்த சில மாதங்களாகத் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். தனிமையில் வசித்து வந்த முத்துமாலை, நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. முத்துமாலையின் இந்த நடவடிக்கை அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வாலிபருடனான பழக்கத்தைக் கைவிடுமாறு முத்துமாலையின் தம்பி பன்னீர்செல்வம் (32) பலமுறை எச்சரித்துக் கண்டித்துள்ளார். ஆனால், முத்துமாலை குடும்பத்தினரின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து அந்த வாலிபருடன் பழகி வந்துள்ளார். இதனால் முத்துமாலையின் நடத்தையில் சந்தேகமடைந்த தம்பி பன்னீர்செல்வம், அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதுதொடர்பாக நாங்குநேரி ஆழ்வானேரியைச் சேர்ந்த தனது சித்தி மகன் இசக்கிப்பாண்டி (35) என்பவருடன் சேர்ந்து பன்னீர்செல்வம் கொலைத் திட்டம் தீட்டியுள்ளார்.

திட்டத்தின்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு, பன்னீர்செல்வமும் அவரது நண்பரான வாகைகுளத்தைச் சேர்ந்த சிவா (28) என்பவரும் தியாகராஜநகரில் உள்ள முத்துமாலையின் வீட்டிற்குள் புகுந்து, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டுத் தப்பியோடினர்.

இக்கோடூரக் கொலை குறித்துப் பெருமாள்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் தேஷ்முக் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் விஜயகுமார் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

முதலில் கொலைக்குச் சதித்திட்டம் தீட்டிக் கொடுத்த இசக்கிப்பாண்டியை நேற்று முன்தினம் கைது செய்த தனிப்படையினர், தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளிகளான தம்பி பன்னீர்செல்வம் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகிய இருவரையும் நேற்று மடக்கிப் பிடித்து கைது செய்தனர். சொந்த அக்காவைத் தம்பியே நண்பனுடன் சேர்ந்து வெட்டிக்கொன்ற சம்பவம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory