» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

நாங்குநேரி புறவழிக் கால்வாய் உள்பட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் மற்றும் நாங்குநேரி வருவாய் வட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான நெ. மரிய வில்சன், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் தலைமையில், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் முன்னிலையில் இன்று (18.07.2026) நேரில் ஆய்வு செய்தார்.
வடகிழக்குப் பருவமழையின் போது பச்சையாறு நதியில் ஏற்படும் வெள்ள நீரானது தாமிரபரணி ஆற்றில் கலந்து, இறுதியில் வீணாகக் கடலில் கலக்கிறது. மாவட்டத்தில் உள்ள பெரிய குளங்களில் நாங்குநேரி பெரிய குளமும் ஒன்றாகும். நாங்குநேரி பெரிய குளத்தின் உபரி நீர் மற்றும் அதன் கீழ் உள்ள தொடர் குளங்களில் இருந்து 46 குளங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் 3,690 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறும், 1,147.20 ஹெக்டர் நிலங்கள் பாசன உறுதி பெறும், 286.80 ஹெக்டர் நிலங்கள் இடைவெளி பூர்த்தி செய்யப்படும். புதிதாக 22,560 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் பாசனத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் வழிவகுக்கும். திட்டத்தின் தொழில்நுட்ப அம்சங்கள், செயல்படுத்தும் முறை மற்றும் மதிப்பீட்டு விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்பு, அரசின் ஒப்புதல் பெறப்பட்டுத் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
சுகாதார நிலையங்களில் ஆய்வு:
பின்னர், நாங்குநேரி அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார இயக்ககத் திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி மதிப்பீட்டில், மூன்று தளங்களுடன் கூடிய புதிய கட்டடக் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் தரம், முன்னேற்றம் மற்றும் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்வது தொடர்பாகப் பொதுப்பணித் துறை மற்றும் மருத்துவத் துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
மேலும், சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்களிடம் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அதன் பின்னர் களக்காடு, திருக்குறுங்குடி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு சுகாதார நிலையங்களிலும் நெ. மரிய வில்சன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ச. வித்யா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஷ் குப்தா, உதவிப் பொறியாளர் பொன்ராஜ், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் லதா, பொதுப்பணித்துறைச் செயற்பொறியாளர் ரன்செட் ரிச்சர்ட், களக்காடு நகராட்சி ஆணையாளர் ராமதிலகம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆடிப் பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்!
திங்கள் 13, ஜூலை 2026 8:44:13 AM (IST)


