» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க தடை!

புதன் 6, மார்ச் 2024 10:08:02 AM (IST)

ஜெயலலிதாவின் தங்க, வைர, வைடூரிய நகைகள், வெள்ளி பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் மார்ச் மாதம் 6, 7-ந் தேதிகளில் ஒப்படைக்குமாறு கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி உத்தரவிட்டது.

அதன்படி கர்நாடக அரசு ஜெயலலிதாவின் தங்க, வைர, வைடூரிய நகைகள், வெள்ளி பொருட்களை தமிழக அரசிடம் இன்று (புதன்கிழமை) ஒப்படைக்க ஏற்பாடுகளை செய்திருந்தது. முன்னதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில், ஜெயலலிதாவின் வாரிசான தன்னிடம், அவரது பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்று கோரி உரிமை கொண்டாடினார். ஆனால் அவரது மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜெ.தீபா மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு நேற்று நீதிபதி முகமது நவாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ஜெயலலிதாவின் வாரிசிடம் தான் அவரது பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்றும், சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பில் இருந்து ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதால், அவரை குற்றவாளியாக கருத முடியாது என்றும் வாதிட்டார்.

மேலும், ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்குமாறும் கோரினார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கிரண் ஜவலி, இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்குமாறு கோரினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முகமது நவாஸ், ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பெங்களூரு சிறப்பு கோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் இதுதொடர்பான அடுத்த விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். ஐகோர்ட்டின் இந்த உத்தரவால், ஜெயலலிதாவின் பொருட்கள் திட்டமிட்டபடி இன்று தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory