» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொன்முடி போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு

புதன் 6, மார்ச் 2024 10:14:13 AM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்ற நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிட்டு வென்ற, திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலகம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வாயிலாக கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, கடந்த 2006-11 திமுக ஆட்சியிலும் இதே துறைக்கு அமைச்சராக இருந்தார். அக்காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2011-ல்பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விழுப்புரம் ஊழல் தடு்ப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2016-ல் இருவரையும் விடுவித்தது. 

2017-ல்சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்தாண்டு டிசம்பர் 21-ம் தேதி வெளியானது. அப்போது, இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். சிறை தண்டனை பெற்றதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி பொன்முடி தனது அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை இழக்க நேரிட்டது. 

ஒருவர்சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தால், நீதிமன்ற உத்தரவைப் பெற்று அத்தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம், தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.அதன்பிறகு தேர்தல் ஆணையம் அந்த தொகுதியை காலியானதாக அறிவித்து, 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், பொன்முடிக்கு, மேல் முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டதால், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும், அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பாக, பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், நேற்று திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. அத்துடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ மூலம் அதற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியது. இதையடுத்து, விரைவில் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.

ஏற்கெனவே, விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததால், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது திருக்கோவிலூர் தொகுதியும் சேர்ந்துள்ளது. மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு, திருக்கோவிலூர் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory