» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தங்க நகை மோசடி வழக்கில் 2பேருக்கு 6 மாதம் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

புதன் 6, மார்ச் 2024 5:23:10 PM (IST)

2094 கிராம் தங்க நகைகளை மோசடி செய்த வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு 6 மாத சிறை  தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு தங்க நகை நிறுவனத்தின் தூத்துக்குடி கிளையில் மேலாளராக ராஜ்மோகன் (49) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கோட்டை தெருவை சேர்ந்த ஆவுடையப்பன் மகன் பரமசிவன் (61) மற்றும் இவரது மகன் உலகநாதன் (32) ஆகியோர் ஓட்டப்பிடாரத்தில் ஒரு சிறிய நகைக்கடை வைத்துள்ளதாகவும் அதற்கு விற்பனைக்காக தங்கம் கேட்டுள்ளனர். இதற்கு ராஜ்மோகன் தனது தங்க நகை நிறுவனம் மூலம் கடந்த 28.10.2020 அன்று முதல் 21.04.2021 வரை 7667 கிராம் தங்க நகைகளை வாங்கி கொடுத்துள்ளார்.

தங்க நகைகளை வாங்கிய பரமசிவன் மற்றும் அவரது மகன் உலகநாதன் ஆகியோர் சில தவணைகளாக தங்க நகைகளை கொடுத்துவிட்டு மீதமுள்ள 2094 கிராம் தங்க நகைகளை திருப்பி தராமல் நம்பிக்கை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து மேற்படி ராஜ்மோகன் திருப்பி கேட்டதற்கு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ராஜ்மோகன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்  அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இவ்வழக்கை மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்  அனிதா புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் IV  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி  குபேரசுந்தர்  இன்று குற்றவாளிகளான பரமசிவன் மற்றும் உலகநாதன் ஆகியோருக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்  அனிதா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்  ஜானகி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory